புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை தொடரும் வேளையில், இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒருவாரத்திற்கு நிறுத்திவைத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த ஒருவர், கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் பாதுகாப்பு குறித்து வாரிய உறுப்பினர்கள் கவலை கொள்வதாகக் கூறினார். பூசலின்போது கிரிக்கெட் ஆட்டங்கள் இடம்பெறுவது சரியாக இருக்காது என அவர்கள் கருதியதாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நபர் சொன்னார்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக ஐபிஎல் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ஐபிஎல் போட்டிகள் உடனடியாக ஒருவாரத்திற்கு நிறுத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்தது.
“முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே ஐபிஎல் ஆட்சி மன்றத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்று ஐபிஎல் கூறியது.
நடப்பு பருவத்தில் ஐபிஎல் போட்டி மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கடைசி ஆட்டம் மே 25ஆம் தேதி இடம்பெறவிருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் சண்டை மூண்டதைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் வியாழக்கிழமை (மே 8) நடந்த ஐபிஎல் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அரங்கில் மின்தடை ஏற்பட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டதாக பிசிசிஐ விளக்கியது.
அதையடுத்து, ஆட்டக்காரர்களும் பார்வையாளர்களும் அரங்கிலிருந்து உடனடியாக வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். கிரிக்கெட் வீரர்கள், ஆதரவுப் பணியாளர்கள், ஒளிபரப்புக் குழுவினர் ஆகியோரை பத்திரமாக அழைத்துவர சிறப்பு ரயில் சேவைக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்தது.