தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல்: 18 ஆண்டு கனவை நிறைவேற்றத் துடிக்கும் பெங்களூரு-பஞ்சாப்

2 mins read
b06e87bc-c96e-4516-9b31-10d6d1b6531e
குவாலிஃபயர்-2 ஆட்டத்தில் பஞ்சாப் அணி பலம்வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியைத் தோற்கடித்தது - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் நடந்துவரும் ஐபிஎல்2025 டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

ஆட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) அகமதாபாத்தில் நடக்கிறது. சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் கிண்ணத்தை வெல்லாததால் இம்முறை ஐபிஎல்லில் புதிய வெற்றியாளர் வாகை சூடவுள்ளார்.

‘பிளே ஆஃப்’ சுற்றின் குவாலிஃபயர்-1 ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் மோதின. ஆனால், அதில் பஞ்சாப் அணி படுதோல்வியடைந்தது.

இருப்பினும், குவாலிஃபயர்-2 ஆட்டத்தில் பஞ்சாப் அணி பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியைத் தோற்கடித்தது.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஒரு துறையில் சறுக்கல் ஏற்பட்டாலும் மற்ற துறைகளில் அதனை ஈடுகட்டி ஆட்டத்தை வெல்லும் தன்மை கொண்டுள்ளது.

அதேபோல் பெங்களூரு அணியும் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி ஆட்டத்தைத் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. இதனால் இறுதியாட்டத்தில் அனல் பறக்கக்கூடும்.

பெங்களூரு அணி ஒவ்வோர் ஆண்டும் கிண்ணத்தை வெல்ல கடுமையாகப் போராடும். ஆனால், கடைசி நேரத்தில் தவறவிட்டுவிடும். இம்முறை பழைய தவறுகளை மீண்டும் செய்யாமல் கிண்ணத்தை வெல்லும் முனைப்புடன் அவ்வணி உள்ளது.

ஷ்ரேயாஸ் சென்ற ஆண்டு கோல்கத்தா அணிக்குக் கிண்ணம் வென்று தந்தார். இம்முறை பஞ்சாப் அணிக்கும் அவர் கிண்ணம் வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடந்த 2வது குவாலிஃபயர் ஆட்டம் மழையால் தாமதமாகத் தொடங்கியது. இறுதியாட்டத்தின் போதும் மழை குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, அகமதாபாத் ஆடுகளம் பந்தடிப்புக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் இரு அணிகளும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவிப்பதில் முனைப்பு காட்டலாம்.

குறிப்புச் சொற்கள்