தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல்: தொடர்ந்து ஆறு சிக்சர் அடித்து இந்திய வீரர் சாதனை

2 mins read
df0b07ea-fadc-4d7f-8b84-a07708deae70
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து ஆறு சிக்சர்களை விளாசிய முதல் ஆட்டக்காரர் எனும் பெருமையைப் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவர் ரியான் பராக். - படம்: ஏஎஃப்பி

கோல்கத்தா: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரில், தான் எதிர்கொண்ட பந்துகளில் தொடர்ந்து ஆறு சிக்சர் அடித்த முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் இந்திய அணி வீரரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவருமான ரியான் பராக்.

ஆயினும், ஞாயிற்றுக்கிழமை நடந்த கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான அப்போட்டியில் ராஜஸ்தான் அணி ஓர் ஓட்டத்தில் தோற்றுப் போனது.

முதலில் பந்தடித்த கோல்கத்தா அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து பந்தடித்த ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 71 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இருப்பினும், 45 பந்துகளில் 95 ஓட்டங்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார் பராக்.

கோல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி வீசிய இன்னிங்சின் 13வது ஓவரின் முதல் பந்தில் ஓர் ஓட்டம் எடுத்தார் ராஜஸ்தான் அணியின் ஷிம்ரன் ஹெட்மயர்.

அடுத்த நான்கு பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார் பராக். அதற்கடுத்த பந்தை அலி ‘வைடு’ பந்தாக வீச, ஓவரின் கடைசி பந்திலும் பராக் சிக்சர் அடித்தார்.

வருண் சக்கரவர்த்தி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலும் ஓர் ஓட்டம் எடுத்து, பராக்கிற்கு வாய்ப்பளித்தார் ஹெட்மயர். அந்த ஓவரின் இரண்டாம் பந்தும் பராக் மட்டையிலிருந்து சிக்சருக்குப் பறந்தது.

ஆனாலும், 18வது ஓவரில் பராக் ஆட்டமிழக்க, ஆட்டம் மீண்டும் கோல்கத்தா அணியின் பக்கம் திரும்பியது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 26 சிக்சர்களை விளாசியுள்ளார் 23 வயதான பாராக். அதிக சிக்சர் அடித்தோர் பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நிக்கலஸ் பூரன் (34 சிக்சர்) முதலிடத்தில் இருக்கிறார். பராக் நான்காம் இடத்தில் உள்ளார்.

பத்து அணிகள் இடம்பெற்றுள்ள ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் இப்போது எட்டாம் இடத்திலுள்ள ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்