புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மே 17ஆம் தேதிமுதல் மீண்டும் தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இம்மாதம் 8ஆம் தேதி இமாச்சலப் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் இடையிலேயே நிறுத்தப்பட்டு, அரங்கில் இருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடர் ஒருவார காலத்திற்கு நிறுத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் வரும் 17ஆம் தேதிமுதல் மீண்டும் தொடங்க இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மத்திய அரசுடனும் பாதுகாப்புத் துறையுடனும் ஆலோசித்த பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சில ஆட்டங்களுக்கான அரங்குகளும் மாற்றப்பட்டுள்ளன.
“மே 17ல் மீண்டும் போட்டிகள் தொடங்கும். ஜூன் 3ல் இறுதிப்போட்டி நடைபெறும். மொத்தம் ஆறு இடங்களில் 17 போட்டிகள் நடைபெறும்,” என பிசிசிஐ கூறியுள்ளது.
தொடரிலிருந்து ஏற்கெனவே வெளியேறிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான எஞ்சிய இரு ஆட்டங்கள் மே 20, 25ஆம் தேதிகளில் நடைபெறும். இதனிடையே, இடையிலேயே நிறுத்தப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) போட்டிகளும் மே 17ஆம் தேதியே தொடங்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது,