சென்னை: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுநாள்வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவந்த சஞ்சு சாம்சன், அடுத்த பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
ராஜஸ்தான் அணியிடமிருந்து சாம்சனை வாங்கிய சென்னை அணி, அவருக்காக ரவீந்திர ஜடேஜா, சாம் கரன் என இருவரை அவ்வணிக்கு விட்டுக்கொடுத்தது.
கடந்த பருவத்தில் சாம்சனும் ஜடேஜாவும் தத்தம் அணிகளால் ரூ.18 கோடி கொடுத்து தக்கவைக்கப்பட்டனர்.
ஆயினும், அடுத்த பருவத்தில் ஜடேஜா தனது சம்பளத்தை ரூ.14 கோடியாகக் குறைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற முறை ரூ.2.4 கோடி கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட கரன், அதே தொகைக்கு இடம் மாறுகிறார்.
சென்னை அணியுடன் இணைந்தது பற்றி தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாம்சன், “ராஜஸ்தான் அணிக்காக முழுத் திறனையும் வெளிப்படுத்தி விளையாடினேன். அங்கு வாழ்நாள் முழுக்க நீடிக்கும் சில உறவுகளும் கிடைத்தன. நேரம் வந்துவிட்டதால் நான் இடம் மாறுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான் அணிமூலம் தமது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கிய ஜடேஜா மீண்டும் அவ்வணிக்குத் திரும்புகிறார்.
“ராஜஸ்தான் அணிக்குத் திரும்புவது சிறப்பானது. என்னைப் பொறுத்தவரை, அது வெறும் அணி மட்டுமன்று, என் இல்லம். அவ்வணியுடன் முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றேன். இன்னும் பலமுறை அதனை வெல்வேன் என நம்புகிறேன்,” என்று ஜடேஜா கூறியுள்ளார்.
அணி மாறிய ஷமி
இதற்கிடையே, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகம்மது ஷமி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு மாறுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் கடந்த பருவத்தில் ஹைதராபாத் அணியால் ரூ.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அதே தொகைக்கு அவர் லக்னோ அணிக்கு மாறுகிறார்.
ஐபிஎல் தொடரில் நூறு போட்டிகளுக்குமேல் விளையாடியுள்ள நிதிஷ் ராணா, ராஜஸ்தான் அணியிலிருந்து கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் தாவுகிறார். மும்பை அணிக்காக விளையாடிவந்த அர்ஜூன் டெண்டுல்கர், இனி லக்னோ அணிக்காக விளையாடுவார்.

