பெங்களூரு: இந்தியன் பிரிமீயர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உலக அளவில் பிரபலமான விளையாட்டுத் தொடர்.
இதில் முக்கியமான அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியும் ஒன்று. அது 2025ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் கிண்ணத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆர்சிபி அணி தற்போது அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது. அணியின் உரிமையாளரான டியாஜியோ (Diageo) நிறுவனம், கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அணியை விற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் நான்கு மாதக் காலத்திற்குள் இந்த விற்பனையை முடிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மதுபான விற்பனையாளரான டியாஜியோ நிறுவனம், ஆர்சிபி அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை நிர்வகித்து வருகிறது.
“ஆர்சிபி அணி எங்களுக்கு ஒரு மதிப்புமிக்க சொத்தாக இருந்து வருகிறது. இருப்பினும், எங்களின் முதன்மைத் தொழிலான மதுபான வர்த்தகத்திற்கு, கிரிக்கெட் வணிகம் ஒரு முக்கிய அங்கமாக இல்லை. எனவே, இந்த முடிவை எடுத்துள்ளோம்,” என்று டியாஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

