உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஈரான் பங்கேற்க முடியாது: ஈரானிய விளையாட்டுத்துறை அமைச்சர்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஈரான் பங்கேற்க முடியாது: ஈரானிய விளையாட்டுத்துறை அமைச்சர்

1 mins read
a188b49d-cd0c-4989-bb0c-b8cbd8b0f5c6
ஈரானின் மூன்று முதல் சுற்று ஆட்டங்களும் அமெரிக்காவில் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்‌ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்துகின்றன. தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

இதன் காரணமாக 2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஈரான் பங்கேற்க முடியாது என்று அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமது துன்யாமலி புதன்கிழமையன்று (மார்ச் 11) தெரிவித்தார்.

“இந்த ஊழல் மலிந்த அரசாங்கம் (அமெரிக்கா) எங்களது தலைவரைப் படுகொலை செய்துள்ள நிலையில், எங்களால் எந்தச் சூழ்நிலையிலும் உலகக் கிண்ணத்தில் பங்கேற்க முடியாது,” என்று அரசுத் தொலைக்காட்சியில் அமைச்சர் தெரிவித்தார்.

2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

“எங்கள் நாட்டு ஆட்டக்காரர்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை, அடிப்படையில் போட்டியில் பங்கேற்பதற்கான சூழலும் இல்லை. ஈரானுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்டுள்ள தீய செயல்கள், கடந்த எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் எங்கள் மீது இரண்டு போர்களைத் திணித்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, எங்களால் நிச்சயமாக அங்குச் செல்ல முடியாது,” என்று அமைச்சர் துன்யாமலி தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த குலுக்கலில், ஈரான் அணி பெல்ஜியம், எகிப்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றிருந்தது. ஈரானின் மூன்று முதல் சுற்று ஆட்டங்களும் அமெரிக்காவில் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துஈரான்உலகக் கிண்ணம்