புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியுடன் பத்தாண்டுகளாகப் பேசுவதில்லை என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
டோனிக்கும் தனக்கும் இடையே நல்லதொரு நட்புறவு இருந்ததில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கடைசியாக டோனியுடன் பேசியது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இருவரும் சேர்ந்து விளையாடியபோதுதான் என்று ‘கிரிக்கெட்நெக்ஸ்ட்’ ஊடகத்திற்கு அண்மையில் அளித்த நேர்காணலின்போது ஹர்பஜன் தெரிவித்தார்.
கடந்த 2018 - 2020 காலகட்டத்தில் சென்னை அணிக்காக விளையாடியிருந்தார் ஹர்பஜன்.
தன்னுடன் பேசாமல் இருப்பதற்கு டோனியிடம் வேண்டுமானால் காரணங்கள் இருக்கலாம் என்ற அவர், அதே நேரத்தில் தனக்கு அப்படி எந்தவொரு காரணமும் இல்லை என்றும் சொன்னார்.
“நான் டோனியுடன் பேசுவதில்லை. சென்னை அணிக்காக விளையாடியபோது இருவரும் பேசிக்கொள்வோம். அதுவும் திடலில் மட்டுந்தான். அதன்பின் அவரும் என் அறைக்கு வந்ததில்லை, நானும் அவரது அறைக்குச் சென்றதில்லை,” என்றார் ஹர்பஜன்.
இருப்பினும், சிலமுறை டோனியுடன் பேசுவதற்குத் தான் முயன்றதாகவும் ஆயினும் அவரிடமிருந்து பதில் வராததால் இனிமேல் அவரைத் தொடர்புகொள்வதில்லை எனத் தான் முடிவெடுத்ததாகவும் ஹர்பஜன் பகிர்ந்துகொண்டார்.
“டோனிக்கு எதிராக நான் எதையும் சொல்லமாட்டேன். அவர் ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால், அவரால் என்னிடம் சொல்ல முடியும். அப்படி ஏதேனும் இருந்திருந்தால், அவர் என்னிடம் சொல்லியிருப்பார். எனது தொலைபேசி அழைப்புகளை ஏற்பவர்களுக்கே நான் மீண்டும் அழைப்பேன். இல்லையெனில், எனக்கும் நேரமில்லை. என்னுடன் நட்பில் இருப்பவர்களுடனே நானும் தொடர்பில் இருப்பேன். கொடுப்பதும் பெறுவதும்தான் உறவுமுறை. நான் உங்களை மதித்தால், நீங்களும் என்னை மதிப்பீர்கள் என நம்புகிறேன்,” என்று ஹர்பஜன் கூறினார்.