தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இது நியாயமில்லை: அக்ரம் சாடல்

2 mins read
e561785e-2b18-4373-8e28-033ceea50631
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதுடெல்லி: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நடப்பு இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரின் இடையிலேயே விலகியது தொடர்பில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரம் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

தேசிய அணிக் கடப்பாடுகளுக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பினை ஏற்று, ஜோஸ் பட்லர், சாம் கரன், வில் ஜாக்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் தாய்நாடு திரும்பிவிட்டனர்.

ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பர் லீக், பிக் பேஷ் லீக் போன்ற டி20 போட்டித் தொடர்களில் ஒரு வீரர் விளையாடுவதாக இருந்தால், அவர் அத்தொடரில் முழுமையாக விளையாட வேண்டும் என்று ‘ஸ்போர்ஸ்கீடா’ ஊடகத்திடம் அக்ரம் சொன்னார்.

“அப்படித்தான் விளையாட வேண்டும். இடையிலேயே சென்றுவிடுவது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அணியின் உரிமையாளரையும் அணித்தலைவரையும் வெறுப்படையச் செய்துவிடும். விளையாட வந்தால் முழுத் தொடருக்கும் வாருங்கள், இல்லையேல் வராதீர்கள்,” என்றார் அக்ரம்.

இந்நிலையில், “சம்பளத்தைக் குறைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆயினும், பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்ற உங்களது அணி, அதன்பின் விளையாடும் ஆட்டங்களில் வெல்லாவிடில் என்ன செய்வது? இதுவரை கடினமாக உழைத்ததெல்லாம், பாதியிலேயே விலகி தேசிய அணிக்கு விளையாடச் சென்றுவிட்ட சிலரால் வீணாகிவிடும். இது நியாயமே இல்லை,” என்றும் அக்ரம் கூறினார்.

மேலும், தன் வீரர்களுக்கு முழுமையான தடையின்மைச் சான்றிதழ்களை வழங்காமல், ஐபிஎல் அணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தையும் அவர் சாடினார்.

முன்னதாக, இடையிலேயே வெளியேறும் வீரர்களுக்கும் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் சுனில் கவாஸ்கர், ‘மிட் டே’ நாளிதழில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்