இந்தியப் பந்துவீச்சாளரை மட்டம் தட்டிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்

இந்தியப் பந்துவீச்சாளரை மட்டம் தட்டிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்

1 mins read
1686e88c-4aa0-4350-89d6-ec7a4a18acb9
இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா (இடது), பாகிஸ்தானின் ஷகீன் ஷா அஃப்ரிடியை நெருங்கக்கூட முடியாது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக். படம்: ஊடகம் -

இஸ்லாமாபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடிக்குப் பக்கத்தில்கூட வர முடியாது என்று ஒப்பிட்டுப் பேசி, மட்டம் தட்டியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரரான அப்துல் ரசாக்.

பாகிஸ்தான் அணியின் தேர்வாளராகவும் இருக்கும் ரசாக், "பும்ராவைக் காட்டிலும் ஷகீன் அஃப்ரிடி எவ்வளவோ மேம்பட்டவர்," என்று கூறியுள்ளார்.

முன்னதாக, 2019ஆம் ஆண்டிலும் பும்ராவை 'பேபி பௌலர்' எனக் குறிப்பிட்டிருந்தார் ரசாக்.

"கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் விளையாடி இருக்கிறேன். ஆகையால், எனக்கு முன்னால் பும்ரா ஒரு 'பேபி பௌலர்'தான். என்னால் அவரது பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு, ஓட்டம் குவிக்க முடியும்," என்று ரசாக் அப்போது கூறியிருந்தார்.

இதனிடையே, அஃப்ரிடி, பும்ரா இருவருமே காயத்திலிருந்து தேறி வருகின்றனர். அடுத்த மாதம் 13ஆம் தேதி தொடங்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அஃப்‌ரிடி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாறாக, ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதலிரு போட்டிகளுக்கான இந்திய அணியில் பும்ரா தேர்வுசெய்யப்படவில்லை. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது.