மியூனிக்: யூரோ 2024 காற்பந்துப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 5-1 எனும் கோல் கணக்கில் ஜெர்மனி வீழ்த்தியதை அடுத்து ஜெர்மனிக்கு இது வெறும் “முதல் படியே” என அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் யூலியன் நாகல்ஸ்மன் கூறியுள்ளார்.
கடைசியாக 2014ல் உலகக் கிண்ணத்தை வென்ற ஜெர்மனி, கடந்த பத்து ஆண்டுகளாக பெரிய அளவிலான போட்டிகளில் சோபிக்கவில்லை. ஆனால், இம்முறை யூரோ போட்டியை ஏற்று நடத்தும் ஜெர்மனி, தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை ஊதித் தள்ளி முத்திரை பதித்தது.
நான்காவது ஐரோப்பியக் கிண்ணத்திற்கு ஜெர்மனி குறிவைக்கும் வேளையில், செய்தியாளர்களிடம் பேசிய நாகல்ஸ்மன், “நாங்கள் பல கோல்களைப் போட்டிருப்பது அனைவருக்கும் நல்ல உணர்வைத் தருகிறது. ஆனாலும், இது வெறும் முதல் படி என்பதை அணியினர் உணர்கின்றனர்,” என்றார்.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே கோல் வேட்டையைத் தொடங்கிய ஜெர்மனிக்கு 10வது நிமிடத்தில் பலன் கிடைத்தது.
இந்நிலையில், ஸ்காட்லாந்து அணியை அதன் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரிக்குமாறு அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் கிளார்க் கேட்டுக்கொண்டார். ‘ஏ’ பிரிவின் அடுத்த இரு ஆட்டங்களில் ஹங்கேரி, சுவிட்சர்லாந்து அணிகளை எதிர்கொள்ள தம் வீரர்கள் உடனடியாக மீண்டெழ வேண்டும் என்றார் அவர்.
கடந்த 11 பெரிய போட்டிகளிலும் குழுச் சுற்றிலிருந்து ஸ்காட்லாந்து முன்னேறியது இல்லை. ஜெர்மனியின் பிடியில் தோல்விகண்ட அவ்வணி இம்முறையும் அடுத்த சுற்றுக்குச் செல்வது சந்தேகமே.
ஆனால், ஜெர்மனிக்கு எதிரான ஸ்காட்லாந்து வீரர்களின் செயல்பாடு, தமது அணியின் தரத்திற்கான அளவுகோல் இல்லை என்று கிளார்க் கூறினார்.
“இன்றிரவு ஆடியதைவிட நாங்கள் இன்னும் சிறந்த அணியே,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
யூரோ போட்டி தொடக்க ஆட்டத்தின் வரலாற்றிலேயே படுதோல்வியைச் சந்தித்துள்ள ஸ்காட்லாந்து, ஜூன் 19ஆம் தேதி சுவிட்சர்லாந்துக்கு எதிராக அணிதிரள வேண்டும். அதே தினம் ஜெர்மனி, ஹங்கேரி அணியை எதிர்கொள்கிறது.