இருவர் 200; இக்கட்டான நிலையில் இலங்கை

இருவர் 200; இக்கட்டான நிலையில் இலங்கை

1 mins read
3d96baa8-5b3c-48bd-ab89-05ee35059575
ஆளுக்கோர் இரட்டை சதம் விளாசிய கேன் வில்லியம்சன் (இடது), ஹென்ரி நிக்கல்ஸ். படம்: ஏஎஃப்பி -

வெலிங்டன்: இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து ஆட்டக்காரர்கள் இருவர் இரட்டை சதம் விளாசினர்.

இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி நியூசிலாந்து சென்றுள்ளது.

கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி கடைசிப் பந்தில் தோற்றுப்போனது.

இந்நிலையில், வெலிங்டனில் வெள்ளிக்கிழமை இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. மழை குறுக்கிட்ட முதல் நாளில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமை அவ்வணியின் கேன் வில்லியம்சனும் ஹென்ரி நிக்கல்சும் அதிரடியாக ஆடி, ஓட்டங்களைச் சேர்த்தனர்.

இருவரும் இரட்டை சதம் அடித்தனர். வில்லியம்சன் 215 ஓட்டங்களையும் நிக்கல்ஸ் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களையும் விளாசினர்.

இருவரும் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 363 ஓட்டங்களைக் குவித்து, இலங்கைப் பந்துவீச்சாளர்களுக்குக் கொடுங்கனவாகத் திகழ்ந்தனர்.

ஒருவழியாக நான்கு விக்கெட் இழப்பிற்கு 580 ஓட்டங்களை எடுத்த நிலையில், நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்களை எடுத்திருந்தது.