சிங்கப்பூர் திடல்தட வீராங்கனை கெர்ஸ்டின் ஓங், தான் படைத்திருந்த தேசியச் சாதனையை முறியடித்துள்ளார்.
தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற சிங்கப்பூர்ப் பொதுவிருதுத் திடல்தடப் போட்டிகளில் பெண்கள் 100 மீட்டர் தடையோட்டத்தை அவர் 13.81 வினாடிகளில் முடித்தார். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் அவர் படைத்த தேசிய சாதனையை ஓங், புதன்கிழமை முறியடித்தார்.
முன்னதாக, மலேசியாவில் அவர் அதே பிரிவில் 13.86 வினாடிகளில் பந்தயத்தை முடித்து தேசியச் சாதனை படைத்தார்.
தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற பெண்கள் 100 மீட்டர் தடையோட்டத்தில் அவர் இரண்டாவதாக வந்தார். ஹாங்காங்கைச் சேர்ந்த லாவ் ட்சு யான் 13.71 வினாடிகளில் முடித்துத் தங்கம் வென்றார். மற்றொரு ஹாங்காங் வீராங்கனையான ஐவி லியூ முன்றாவது இடத்தைப் பிடித்தார்.
லாவ், லியூ உட்பட மூன்று ஹாங்காங் வீராங்கனைகளை சிங்கப்பூருக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்ததுடன் அவர்கள் இங்குத் தங்குவதற்கான செலவையும் தான் ஏற்றுக்கொண்டதாக ஓங் பின்னர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். அவர்களுடன் போட்டியிடுவதற்காக ஓங் அவ்வாறு செய்தார்.
இதற்கிடையே, சிங்கப்பூரின் திடல்தட நட்சத்திரம் சாந்தி பெரேரா, பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தின்போது காயமுற்றார். அப்பிரிவில் அவர் மற்ற எல்லா போட்டியாளர்களுக்கும் பின்னால் முடித்தார்.
சாந்தி பெரேராவுக்கு ஏற்பட்ட காயம் குறித்து பின்னர் தகவல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

