கோலாம்பூர்: 2024-2025 மலேசிய சூப்பர் லீக் காற்பந்து விருதைத் தொடர்ந்து 11வது முறையாக வென்ற ஜோகூர் டாருல் தக்சிம் குழுவுக்கு மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமது பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.
மாமன்னர் தமது அதிகாரத்துவ ஃபேஸ்புக் பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.
“இந்த மாபெரும் சாதனை, 2013ஆம் ஆண்டு ஜோகூர் பட்டத்து இளவரசர் இஸ்மாயிலால் நிறுவப்பட்டதிலிருந்து அணியின் தொடர்ச்சியான 11வது சூப்பர் லீக் பட்டத்தையும் அக்குழுவின் 29வது விருதையும் குறிக்கிறது,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (பிப்ரவரி 24) இரவு ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இப்ராஹிம் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் விருதைத் தற்காக்கும் ஜோகூர் குழு 2-0 என்ற கோல் கணக்கில் பேராக் குழுவைத் தோற்கடித்து, சூப்பர் லீக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.
முற்பாதியில் ஜோகூர் குழுவில் ஸ்பானிய ஆட்டக்காரர் ஜேசே ராட்ரிகேஸ் ருவிஸ் ஒரு கோலும் பிற்பாதியில் அக்குழுவின் கொலம்பிய ஆட்டக்காரர் ஜோர்ஜே லியோனார்டோ ஒப்ரிகோன் ரோஜாஸ் ஒரு கோலும் போட்டு வெற்றியை உறுதிப்படுத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் ஜோகூர் குழு 20 ஆட்டங்களில் 58 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடம் பிடித்த நிலையில், அதற்கு அடுத்த நிலையில் உள்ள சிலாங்கூர் குழு 19 ஆட்டங்களில் 42 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.
இந்தக் காற்பந்துப் பருவத்தில் நன்கொடை கேடயம், எஃப்ஏ கிண்ணம், சூப்பர் லீக் விருது ஆகிய நான்கு உள்ளூர் காற்பந்து விருதுகளில் மூன்றைக் கைப்பற்றியுள்ள ஜோகூர் குழு, வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் மலேசிய கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அக்கிண்ணத்தையும் வெல்ல ஆவலுடன் இருக்கிறது.
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் மலேசிய கிண்ண இறுதிப் போட்டியில் ஜோகூர் குழுவும் ஸ்ரீ பாகாங் குழுவும் சந்திக்கும்.
தொடர்புடைய செய்திகள்
ஒருவேளை மலேசிய கிண்ணத்தையும் ஜோகூர் குழு வெற்றுவிட்டால், நான்கு உள்ளூர் காற்பந்து விருதுகளையும் மூன்று முறை அது வென்று சாதனை படைத்த குழுவாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது என்று பெர்னாமா செய்தி தெரிவித்தது.