தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ராகுல் விக்கெட் காப்பாளராகச் செயல்படமாட்டார்’

2 mins read
0da3d9e8-d6f6-4f60-a003-ae14afa529c9
மூன்று விக்கெட் காப்பாளர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தாலும் கே எல் ராகுல் பந்தடிப்பாளராகவும் களக்காப்பாளராகவுமே இருப்பார் என இந்திய ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. - படம்: ஏஎஃப்பி

ஹைதராபாத்: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுல் இந்திய அணியின் விக்கெட் காப்பாளராகச் செயல்படமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மாறாக, கே.எஸ். பரத் அப்பணியை மேற்கொள்வார் எனச் சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து அணி, இந்தியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

இதனையடுத்து, முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதில் ராகுல், பரத், துருவ், ஜுரெல் என மூன்று விக்கெட் காப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அண்மையில் தென்னாப்பிரிக்கா சென்றிருந்த இந்திய அணி, அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போட்டிகளில் ராகுல் இந்திய அணியின் விக்கெட் காப்பாளராகச் செயல்பட்டார்.

தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பதாகவும் பந்து அதிகம் எழும்பும் என்பதாலும் விக்கெட் காப்பாளராகச் செயல்படுமாறு ராகுலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கேட்டுக்கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில், இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் விக்கெட் காப்பாளர் பணி பரத்திடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் என நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் வேகப் பந்துவீச்சாளர்களைச் சுழற்சி முறையில் களமிறக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஜஸ்பிரீத் பும்ரா, முகம்மது சிராஜ், முகேஷ் குமார், ஆவேஷ் கான் என நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் உள்ளனர். காயமடைந்துள்ள முகம்மது ஷமி இன்னும் பயிற்சியைத் தொடங்காததால், அவர் எப்போது அணிக்குத் திரும்புவார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

முதல் போட்டி இம்மாதம் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

குறிப்புச் சொற்கள்