யூரோ 2024: மூக்குடைந்த எம்பாப்பே முகக்கவசத்துடன் களமிறங்குவார்

1 mins read
f88d156c-63cd-413b-abb3-fc68b4a5acf4
ஆஸ்திரியாவிற்கு எதிரான ஆட்டத்தின் பிற்பாதியில் எதிரணி வீரருடன் மோதியதால் பிரான்ஸ் அணித்தலைவர் கிலியன் எம்பாப்பேயின் மூக்கு உடைந்தது. - படம்: ஏஎஃப்பி

டுசல்டோர்ஃப்: ஆஸ்திரியாவிற்கு எதிரான யூரோ 2024 காற்பந்து ஆட்டத்தில் பிரான்ஸ் அணித் தலைவர் கிலியன் எம்பாப்பே மூக்கு உடைந்து காயமுற்றதைப் பிரெஞ்சுக் காற்பந்துச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் நடைபெற்றுவரும் யூரோ கிண்ணப் போட்டிகளில் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள அவ்விரு அணிகளும் திங்கட்கிழமை (ஜூன் 17) மோதின. அதில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது.

ஆட்டத்தின்போது ஆஸ்திரியத் தற்காப்பு ஆட்டக்காரர் கெவின் டான்சோவின் தோள் இடித்ததால் 25 வயதான எம்பாப்பே காயமுற்றார்.

அதனால், ஆட்டத்தின் இறுதியில் எம்பாப்பேக்குப் பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டார். ஆட்டம் முடிந்தபின் ஊடுகதிர்ப் பரிசோதனைக்கு அவசர மருத்துவ ஊர்தி மூலம் அவர் மருத்துவமனைக்கு விரைந்தார்.

பரிசோதனையில் எம்பாப்பேயின் மூக்கு உடைந்தது உறுதிசெய்யப்பட்டது.

ஆயினும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள மாட்டார் என்றும் பிரெஞ்சுக் காற்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், நெதர்லாந்துக்கு எதிராக சனிக்கிழமை (ஜூன் 22) நடக்கும் போட்டியில் எம்பாப்பே களமிறங்குவது கேள்விக்குறியாகியுள்ளது.

இதனிடையே, “எம்பாப்பேக்குச் சிறப்பு முகக்கவசம் உருவாக்கப்படும். சில நாள் சிகிச்சைக்குப் பிறகு அவரை மீண்டும் களமிறக்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும்,” என்று பிரெஞ்சுக் காற்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்