மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சகல், தம்முடைய மனைவி தனஸ்ரீ வர்மாவிடமிருந்து மணவிலக்கு பெற்றார்.
மும்பைக் குடும்ப நீதிமன்றத்தில் மணவிலக்கு உறுதியானது.
நடனக் கலைஞரான தனஸ்ரீக்குச் சகல் வாழ்க்கைப்படியாக (alimony) எவ்வளவு வழங்கவுள்ளார் என்ற விவரத்தை வெளியிட அவர்களின் வழக்கறிஞர் மறுத்துவிட்டார்.
ஆயினும், தனஸ்ரீக்கு 4.75 கோடி ரூபாய் வழங்க சகல் ஒத்துக்கொண்டதாக ‘பார் அண்ட் பெஞ்ச்’ தகவல் கூறுகிறது.
மணவிலக்கைத் தொடர்ந்து, ‘தேக்கா ஜி தேக்கா மைனே’ எனும் புதிய இசைக் காணொளியை வெளியிட்டுள்ளார் தனஸ்ரீ. கசப்பான உறவுமுறையில் அது கவனம் செலுத்துவதால், அது மறைமுகமாகச் சகலைச் சாடுவதாக உள்ளது எனப் பேச்சு எழுந்துள்ளது.
இதனிடையே, சகலின் காதலியாகக் கூறப்படும் ஆர்ஜே மஹ்வாஷும் சமூக ஊடகம் வழியாகப் பதிவிட்டுள்ள செய்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் அமைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
“பொய்கள், பேராசை, ஏமாற்றுக்கு அப்பால்... கடவுளின் அருளால், நாங்கள் இன்னும் நிலைத்திருக்கிறோம்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நடன அமர்வு ஒன்றில் சகலும் தனஸ்ரீயும் முதன்முறையாகச் சந்தித்தனர். அப்போது மலர்ந்த நட்பு காதலாகி, 2020 டிசம்பரில் திருமணத்தில் முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் சகல் வெளிநாடுகளுக்கு விளையாடச் சென்றபோதெல்லாம் தனஸ்ரீயும் உடன் சென்றார். ஆயினும், நாளாக நாளாக உறவு கசந்து, அவர்களுக்குள் நிரந்தரப் பிரிவை ஏற்படுத்திவிட்டது.
கடந்த பருவங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாடிய சகல், இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். அவரைப் பஞ்சாப் அணி ரூ.18 கோடி விலைகொடுத்து வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.