லண்டன்: இங்கிலாந்தின் லீக் கிண்ண காற்பந்துப் போட்டி தொடர்ந்து முக்கியமான போட்டியாக உள்ளது என்று மான்செஸ்டர் யுனைடெட்டின் நிர்வாகி டென் ஹாக் தெரிவித்துள்ளார்.
டென் ஹாக் தலைமையின்கீழ் லீக் கிண்ணத்தை 2022/2023 பருவத்தில் யுனைடெட் வென்றது.
ஆனால் லீக் கிண்ணப் போட்டி தேவையற்றது என்றும் குழுக்களுக்கு அது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்றும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் களமிறங்கும் பல முன்னணி குழுக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய அளவிலான பிரசித்திபெற்ற போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட லீக் கிண்ணப் போட்டி இடையூறு விளைவிப்பதாக அவை கூறுகின்றன.
ஆனால் இதுதொடர்பாக டென் ஹாக் மாற்று கருத்து தெரிவித்துள்ளார்.
“லீக் கிண்ணப் போட்டி முக்கியமானது என்று உறுதியாகக் கூறுவேன். எஃப்ஏ கிண்ணப் போட்டி, லீக் கிண்ணப் போட்டி ஆகியவை முக்கியமானவை. கிண்ணத்தை வெல்லும் இலக்குடன் அனைத்து குழுக்களும் மிகுந்த முனைப்புடன், முழுக் கவனத்துடன் செயல்படுகின்றன.
“லீக் கிண்ணத்தை லிவர்பூல் கடந்த ஆண்டு கைப்பற்றியது. இறுதி ஆட்டத்தை நான் பார்த்தேன். அதில் களமிறங்கிய இரு குழுக்களும் கிண்ணத்துக்காகப் போராடின. லீக் கிண்ணத்தை வெல்ல யுனைடெட்டும் விரும்புகிறது. முடிந்தால் அனைத்துக் கிண்ணங்களையும் கைப்பற்றுவதே எங்கள் இலக்கு,” என்றார் டென் ஹாக்.