மெல்பர்ன்: கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு உலகில் தனக்கு எனத் தனி இடத்தைப் பிடித்துள்ளது ஃபார்முலா ஒன் கார்ப் பந்தயம்.
அதற்கு முக்கிய காரணம் கண்கவர் விளம்பரங்கள், சமூக ஊடகங்கள், ஈர்ப்பான நெட்பிளிக்ஸ் தொடர்கள்தான். இந்நிலையில், ஃபார்முலா ஒன் கார்ப் பந்தயம் அதன் 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஏழு கார்ப் பந்தயங்களுடன் 1950ஆம் ஆண்டு முதல் பருவம் தொடங்கியது. தற்போது 2025ஆம் ஆண்டில் 24 கார்ப் பந்தயங்களாக அது மாறியுள்ளது.
இந்தப் பருவத்தின் முதல் கார்ப் பந்தயம் ஆஸ்திரேலியாவில் மார்ச் 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
சாதிக்க காத்திருக்கும் ஹாமில்டன்
இந்தப் பருவத்தில் அனைவரின் கவனமும் ஃபெராரி அணிக்கு மாறிய லூயிஸ் ஹாமில்டன் மீது உள்ளது. ஏழு முறை உலக வெற்றியாளர் கிண்ணத்தை வென்ற ஹாமில்டன் எட்டாவது கிண்ணத்தை வெல்ல காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில பருவங்கள் ஹாமில்டனுக்கு சரியாக அமையவில்லை. அதனால் இந்தப் பருவத்தில் அவர் ஃபெராரி அணியில் இணைந்தார். ஃபெராரி தனது கனவை நனவாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹாமில்டனுக்குச் சவால்விடும் வகையில் வளர்ந்துள்ளார் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன். தொடர்ந்து நான்கு உலக வெற்றியாளர் கிண்ணத்தை வென்ற வெர்ஸ்டாப்பன் இந்தப் பருவத்தில் அதை ஐந்தாவது கிண்ணமாக மாற்ற நம்பிக்கை கொண்டுள்ளார்.
இதற்கு முன்னர் ஐந்து கிண்ணங்களைத் தொடர்ந்து வென்றவர் மைக்கேல் சூமாக்கர் மட்டுமே.
தொடர்புடைய செய்திகள்
மெக்லாரன் எழுச்சி
கடந்த பருவம் சிறப்பான ஒன்றாக அமைந்தது. ரெட் புல் அணிக்கு மெக்லாரன், மெர்சிடிஸ், ஃபெராரி அணிகள் கடுமையான நெருக்கடி கொடுத்தன.
வெர்ஸ்டாப்பன் வெற்றியாளர் கிண்ணத்தை வென்றாலும் அணிகளுக்கான புள்ளிப்பட்டியலில் மெக்லரென் முதலிடம் வந்து சாதித்தது. இது ரெட்புல் அணிக்குப் பெரிய அடியாக அமைந்தது.
இம்முறையும் மெக்லாரென் தனது முழு பலத்தைக் காட்டத் தயாராக இருக்கும். கடந்த ஆண்டு அதன் ஓட்டுநர்கள் லாண்டோ நாரிசும், ஆஸ்கர் பியாஸ்டிரியும் புள்ளிகளையும் வெற்றிகளையும் அள்ளினர். அதை இப்பருவத்திலும் தொடர காத்திருக்கின்றனர்.
பலம், பலவீனம்
இம்முறை ஃபெராரி அனுபவத்தையும் வேகத்தையும் கலந்த அணியாக உள்ளது. இதற்கு முன் அது 2007ஆம் ஆண்டில் தான் ஓட்டுநர் கிண்ணத்தை வென்றது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் கிண்ணத்தை வெல்ல அது காத்திருக்கிறது.
முன்னணி அணியாக வலம் வந்த மெர்சிடிஸ் ஜார்ஜ் ரசலை அதிகம் சார்ந்துள்ளது. அவருக்குத் துணையாக இத்தாலியின் 18 வயது கிமி ஆன்டொனெலி உள்ளார்.
அதேபோல் ரெட்புல் அணியில் வெர்ஸ்டாபனுக்குத் துணையாக நியூசிலாந்தின் லியம் லாசன் உள்ளார். லாசன் புள்ளிகள் குவிக்கத் தவறினால் அவர் இடம் எளிதில் பறிபோகும்.
இப்பருவத்தில் மிக முக்கியமான பந்தயங்களில் ஒன்றாக உள்ள சிங்கப்பூர் இரவு கார்ப் பந்தயம் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி நடக்கிறது. அது இப்பருவத்தின் 18வது கார்ப் பந்தயம்.

