சிங்கப்பூர் காற்பந்துக் குழுவான லயன் சிட்டி செய்லர்ஸ் (எல்சிஎஸ்), ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் 2 கிண்ணத்தை ஷார்ஜா எஃப்சி குழுவிடம் நூலிழையில் பறிகொடுத்தது.
பீஷான் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (மே 18) நடந்த ஆட்டத்தில், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைச் சேர்ந்த ஷார்ஜா எஃப்சியிடம் 2-1 எனும் கோல் கணக்கில் எல்சிஎஸ் தோல்வியுற்றது. ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் ஷார்ஜா எஃப்சி வெற்றி கோலைப் போட்டது.
அதிபர் தர்மன் சண்முகரத்னம், சிறப்பு விருந்தினராக இந்த ஆட்டதை அரங்கில் பார்த்தார். மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் மனைவி ஹோ சிங் உட்பட மொத்தம் 9,737 பேர் அரங்கில் இந்த ஆட்டத்தைக் கண்டுகளித்தனர்.
ஆட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்சிஎஸ் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அலெக்சாண்டர் ரன்கோவிச், “1-0 எனும் கோல் கணக்கில் பின்னடைவைச் சந்தித்தாலும், எமது வீரர்கள் அபாரமாக விளையாடினர். ஆனால், ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் கோலைப் பறிகொடுத்தது மிகுந்த ஏமாற்றம் தருகிறது.
“என்றாலும், என் ஆட்டக்காரர்கள்மீது பெருமை கொள்வதைவிட நான் வேறெதுவும் சொல்வதற்கில்லை,” என்றார்.
அதிபர் தர்மன் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், எல்சிஎஸ் கடுமையாகப் போராடியதையும் தன்னால் ஆன அனைத்தையும் அது கொடுத்ததையும் சுட்டினார்.
“அனைத்துலக அளவில் போட்டியிடுவது எப்போதுமே கடினம்தான். ஆனால், சிறியதொரு நாட்டின் உணர்வுக்கு ஏதோ சிறப்புள்ளது,” என்றார் அவர்.