தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறப்பான வெற்றிக்குக் குறிவைக்கும் லிவர்பூல்

2 mins read
056f9554-7a18-4d55-bc71-ee70059fc738
செல்சி நிர்வாகி பொக்கெட்டினோ (இடது), லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: லீக் கிண்ணக் காற்பந்து இறுதி ஆட்டத்தில், செல்சி குழுவை வீழ்த்தி, அவ்வெற்றியை நிர்வாகி யர்கன் கிளோப்பிற்குக் காணிக்கையாக்கக் காத்திருக்கிறது லிவர்பூல் குழு.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக லிவர்பூலுக்குப் புத்துயிரூட்டி எழுச்சி பெறச் செய்து, அக்குழு பல வெற்றிகளைக் குவிக்கவும் மகுடம் சூடவும் முக்கியக் காரணமாக விளங்கியவர் கிளோப்.

இந்நிலையில், அவர் இப்பருவத்துடன் லிவர்பூல் குழுவிலிருந்து விடைபெறப் போவதாக அறிவித்து, அதிர்ச்சியளித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பால் லிவர்பூலின் வெற்றிநடையில் தடுமாற்றம் இருக்குமோ என இலேசாக அச்சம் தலைதூக்கியது.

ஆனால், அக்குழு கடைசியாக விளையாடிய ஆறு ஆட்டங்களில் ஐந்தில் வெற்றியைச் சுவைத்துள்ளது.

வெம்பிளி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள லீக் கிண்ண இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் வென்றால், அது 2022ஆம் ஆண்டிற்குப்பின் அக்குழு கைப்பற்றும் முதல் கிண்ணமாக இருக்கும்

கடந்த 2022ஆம் ஆண்டு எஃப்ஏ கிண்ணம், லீக் கிண்ண இறுதி ஆட்டங்களில் லிவர்பூல், செல்சியைத் தோற்கடித்து வாகை சூடியிருந்தது.

லிவர்பூல் நிர்வாகி கிளோப் ஆறு முக்கியக் கிண்ணங்களை வென்று தந்துள்ளார்.

இந்நிலையில், “இந்தப் பருவத்தில் எங்களது முதல் கிண்ணத்தைக் கைப்பற்றி, இந்த நாளைச் சிறப்பான நாளாக்க விரும்புகிறோம்,” என்று கூறியுள்ளார் லிவர்பூல் குழுத்தலைவர் வெர்ஜில் வேன் டைக்.

லிவர்பூல் துணைப் பயிற்றுவிப்பாளர் பெப் லெண்டர்சும் அவ்வாறே கூறினார்.

“வெற்றிக்குப் போராடுவோம். இது எங்களுக்குச் சிறப்பான ஆட்டம். சிறப்பான ஆட்டத்திற்குச் சிறப்பான செயல்பாடு தேவை. நாங்கள் அதில் கவனம் செலுத்துவோம்,” என்றார் லெண்டர்ஸ்.

அரிய வாய்ப்பு

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்துவரும் செல்சி குழுவிற்கும் லீக் கிண்ண இறுதியாட்டம் அரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

அக்குழுவின் இப்போதைய நிர்வாகியும் ஸ்பர்ஸ் குழுவின் முன்னாள் நிர்வாகியுமான பொக்கெட்டினோ, இங்கிலாந்தில் இன்னும் ஒரு கிண்ணம்கூட வென்றதில்லை.

அத்துடன், இப்பருவமும் செல்சிக்கு ஏற்றமானதாக இல்லாததால் செல்சி ரசிகர்கள் பொக்கெட்டினோமீது கோபத்தில் உள்ளனர்.

பிரிமியர் லீக் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலைவிட செல்சி 25 புள்ளிகள் குறைவாகப் பெற்று, பத்தாம் நிலையில் உள்ளது. 2018 எஃப்ஏ கிண்ணத்திற்குப் பிறகு செல்சி உள்நாட்டில் எக்கிண்ணமும் வென்றதில்லை.

இந்நிலையில், “இது எங்களது கனவு. கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றிபெறப் போராடுவோம்,” என்று பொக்கெட்டினோ கூறியுள்ளார்.

நிர்வாகிகளாக கிளோப்பும் பொக்கெட்டினோவும் இதுவரை 13 முறை மோதியுள்ள நிலையில், அதில் ஒருமுறை மட்டுமே பொக்கெட்டினோ வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்