உல்வர்ஹேம்டன்: இப்பருவத்தின் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் முதன்முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது லிவர்பூல் குழு.
உல்வ்ஸ் குழுவிற்கெதிராக சனிக்கிழமை பின்னிரவு நடந்த ஆட்டத்தில் லிவர்பூல் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றதன்மூலம் இந்த ஏற்றம் கிட்டியது.
முதற்பாதியின் இறுதி நேரத்தில் இப்ராகிமா கொனாட்டே அடித்த கோல் மூலம் முன்னிலைக்குச் சென்றது லிவர்பூல். இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் அவர் அடித்த முதல் கோல் இதுதான்.
நடப்புப் பருவத்தில் இன்னும் வெற்றி வாசனையை நுகராது பட்டியலின் கடைசி நிலையில் இருக்கும் உல்வ்ஸ் குழு, 56ஆவது நிமிடத்தில் பதில் கோலடித்து, ஆட்டத்தைச் சமன்படுத்தியது.
ஆனாலும், அதற்கு ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அவ்வாய்ப்பைத் தவறவிடாது பந்தை வலைக்குள் தள்ளி, லிவர்பூலின் வெற்றியை உறுதிசெய்தார் நட்சத்திர வீரர் முகம்மது சாலா.
இதுவரை ஆறு ஆட்டங்கள் நடந்துள்ள நிலையில், 15 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது லிவர்பூல்.
முதலிடத்திற்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சி தந்தாலும், இப்போதே பட்டத்திற்கான போட்டியில் தாங்கள் முன்னிலையில் இருப்பதாகச் சொல்ல முடியாது என்றார் லிவர்பூல் நிர்வாகி ஆர்னி ஸ்லோட்.
“19 ஆட்டங்கள் குறித்து இதே நிலையில் இருந்தால், அது சற்று நம்பிக்கையைத் தருவதாக இருக்கும்,” என்று அவர் சொன்னார்.
முன்னதாக நடந்த ஆட்டம் ஒன்றில், மான்செஸ்டர் சிட்டி 1-1 என்ற கோல் கணக்கில் நியூகாசல் யுனைடெட்டுடன் சமநிலை கண்டது. இதனால், சிட்டி குழு முதலிடத்திலிருந்து சறுக்க நேரிட்டது.
ஆர்சனல் 4-2 என்ற கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டியையும் அதே கோல் கணக்கில் செல்சி, பிரைட்டனையும் வென்றன.
தற்போது, 14 புள்ளிகள் பெற்றுள்ள சிட்டியும் ஆர்சனலும் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளன. அவற்றைவிட ஒரு புள்ளி குறைவாகப் பெற்றுள்ள செல்சி குழு நான்காம் இடத்தில் இருக்கிறது.