லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் தடுமாறியபடி வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது லிவர்பூல்.
லீக்கில் குறைவான ஆட்டங்களே எஞ்சியிருக்கும் வேளையில் பட்டியலில் பல புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடம் வகிக்கும் லிவர்பூல்தான் விருதை வெல்லும் என்பது பரவலான எதிர்பார்ப்பு. எஞ்சியுள்ள ஆறு ஆட்டங்களில் இரண்டில் வெற்றிபெற்றால் லிவர்பூல் லீக் விருதை வெல்வது உறுதியாகிவிடும்.
கடந்த 35 ஆண்டுகளில் லிவர்பூல் ஒருமுறைதான் பிரிமியர் லீக் விருதை வென்றிருக்கிறது.
வெஸ்ட் ஹேமுக்கு எதிரான ஆட்டத்தில் லூயிஸ் டியாஸ், வெர்ஜில் வேன் டைக் ஆகியோர் லிவர்பூலின் கோல்களைப் போட்டனர். லிவர்பூல் ஒரு கோல் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தபோது 86வது நிமிடத்தில் ஆண்டி ராபர்ட்சன் சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதால் கோல் எண்ணிக்கை சமமானது. அப்படியிருந்தும் 89வது நிமிடத்தில் வேன் டைக் லிவர்பூலை வெல்லச் செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட், மான்செஸ்டர் யுனைடெட்டை 4-1 எனும் கோல் கணக்கில் துவைத்தெடுத்தது. இந்தப் பருவம் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டின் அவலநிலை தொடர்கிறது.
இதர ஆட்டங்களில் செல்சி, இப்சுவிச் டவுனுடன் 2-2 என சமநிலை கண்டு அவமானப்படாமல் பார்த்துக்கொண்டது, டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், உல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சிடம் 4-2 எனத் தோல்விகண்டது.