லண்டன்: லீக் கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் குழு முன்னேறியது.
சிங்கப்பூர் நேரப்படி, வியாழக்கிழமை (ஜனவரி 25) அதிகாலை லிவர்பூல் - ஃபுல்ஹம் குழுக்கள் மோதிய இரண்டாவது அரையிறுதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆட்டத்தின் 11வது நிமிடத்திலேயே கோலடித்து லிவர்பூலுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் லூயிஸ் டியாஸ். ஆயினும், ஆட்டம் முடிய 11 நிமிடங்கள் இருந்தபோது, ஃபுல்ஹமின் இஸா டியோப் பதில் கோலடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டுவந்தார்.
முன்னதாக, அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் லிவர்பூல் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. இதையடுத்து, ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 3-2 என முன்னிலை பெற்று, லிவர்பூல் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
வரும் பிப்ரவரி 25ஆம் தேதி லண்டன் வெம்பிளி அரங்கில் நடக்கும் இறுதிப் போட்டியில் செல்சியுடன் லிவர்பூல் பொருதவுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டிலும் இவ்விரு குழுக்களே இறுதிப் போட்டியில் மோதின. அப்போது, பெனால்டி வாய்ப்புகளில் வென்று, லிவர்பூல் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
லிவர்பூல் குழு இதுவரை ஒன்பது முறை லீக் கிண்ணத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.