லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் குழு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) இரவு புள்ளிப்பட்டியலில் உல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்ஸ் குழுவை எதிர்கொள்கிறது.
சிங்கப்பூர் நேரப்படி இந்த ஆட்டம் இரவு 10 மணிக்கு நடக்கிறது.
இந்தப் பருவத்தில் வெற்றி மேல் வெற்றியைக் குவித்து வரும் லிவர்பூல் அணி கடந்த ஆட்டத்தில் எவர்ட்டன் அணிக்கு எதிராக தடுமாறியது.
இறுதி நிமிடங்களில் கவனக்குறைவாக ஆடியதால் ஆட்டத்தை சமநிலையில் மட்டுமே லிவர்பூல் குழுவால் முடிக்க முடிந்தது.
எஃப்ஏ கிண்ணத்தில் பிளைமவுத் குழுவிடம் தோல்வி அடைந்ததில் இருந்து லிவர்பூல் சற்று ஏமாற்றத்துடன் காணப்படுகிறது. அதனால் உல்வர்ஹேம்ப்டன் அணியுடன் வெற்றிபெற்று மீண்டும் தனது ஆதிக்கத்தை தொடர லிவர்பூல் திட்டமிடக்கூடும்.
இப்பருவத்தில் 24 ஆட்டங்களில் விளையாடிய லிவர்பூல் 17 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆறு ஆட்டங்களை சம நிலையில் முடித்துள்ளது.
இந்நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின் 12.30 மணிக்கு (பிப்ரவரி 17) நடக்கும் ஆட்டத்தில் மோதுகின்றன.
இப்பருவத்தில் சரியாக விளையாடாத முன்னணி அணிகளின் பட்டியலில் யுனைடெட் குழுவும் ஸ்பர்ஸ் குழுவும் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
இரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் விளையாடி எட்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளன. அதனால் இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசிக்க இரு அணிகளும் போராடக்கூடும் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.