லிவர்பூல்: இந்தக் காற்பந்துப் பருவத்தின் இங்கிலிஷ் பிரிமியர் லீக் விருதை வென்றுள்ளது லிவர்பூல்.
இதனுடன் சேர்ந்து லிவர்பூல் மொத்தம் 20 முறை லீக் விருதை வென்றுள்ளது. முன்னதாக மான்செஸ்டர் யுனைடெட்தான் அத்தனை முறை லீக் விருதைக் கைப்பற்றியிருந்தது. இப்போது லிவர்பூலும் அதற்கு ஈடுகொடுத்துள்ளது.
இங்கிலாந்துக் காற்பந்து வரலாற்றில் இவ்விரு குழுக்களும்தான் ஆக அதிக முறை லீக் விருதை வென்றுள்ளன.
இப்பருவம் வாகை சூட ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) டோட்டன்ஹம் ஹாட்ஸ்பருக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூல் சமநிலையாவது காணவேண்டியிருந்தது. ஆனால், அதையும் தாண்டி ஆட்டத்தில் வெல்வது மட்டுமின்றி ஸ்பர்சை 5-1 எனும் கோல் கணக்கில் நசுக்கியது லிவர்பூல்.
லிவர்பூலின் புதிய நிர்வாகியான ஆர்ன ஸ்லொட் தனது முதல் பருவத்திலேயே லீக் விருதைக் கைப்பற்றியுள்ளார். இப்பருவம் தொடங்குவதற்கு முன்புதான் அவர் லிவர்பூல் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார்.
கடந்த 35 ஆண்டுகளில் லிவர்பூல் இருமுறைதான் லீக் விருதை வென்றிருக்கிறது. அதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் லிவர்பூல் லீக் வாகை சூடியிருப்பது இது இரண்டாவது முறையாகும்.