லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான லிவர்பூல், புதிய நிர்வாகி ஆர்ன ஸ்லோட்டின்கீழ் தனது அடுத்த அத்தியாயத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
லிவர்பூல், ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 25) ஸ்லோட்டின் தலைமையில் தனது சொந்த மண்ணான ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கில் முதன்முறையாக விளையாடியது. பிரென்ட்ஃபர்டுக்கு எதிரான அந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது லிவர்பூல்.
லூயிஸ் டியாஸ், முகம்மது சாலா ஆகியோர் லிவர்பூலின் கோல்களைப் போட்டனர்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக, நிர்வாகி யர்கன் கிளோப்பின் தலைமையில் அதற்கு முன்பு பல ஆண்டுகள் காணாத பொற்காலத்தை அனுபவித்த லிவர்பூல், ஸ்லோட்டுக்குக்கீழ் தனது வெற்றிப் பயணத்தைத் தொடரும் என்று ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் வுல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சை 6-2 எனும் கோல் கணக்கில் கதிகலங்க வைத்தது செல்சி.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முற்பாதியின் முடிவில் கோல் எண்ணிக்க 2-2 என இருந்தது. பிற்பாதியாட்டத்தில் கோல்களை அடித்துத் தள்ளியது செல்சி.
செல்சியின் நொனி மாடுவெக்கே மூன்று கோல்களைப் போட்டார்.
போர்ன்மத்தும் நியூகாசல் யுனைடெட்டும் மோதிய ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் போர்ன்மத் வெற்றி கோலைப் போட்டதுபோல் தெரிந்தது. ஆனால் விஏஆர் எனும் துணை நடுவர் அந்த கோல் கணக்கில்கொள்ளப்படாது எனத் தீர்மானித்தார்
போர்ன்மத் வீரர் ஒருவர் பந்தைக் கையால் தொட்டது அதற்குக் காரணம்.