நகோயா: ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பூப்பந்துப் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரின் லோ கியன் இயூ வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் குன்வாலுட் விடிட்சார்னுடன் லோ மோதினார்.
21-12, 21-16 எனும் புள்ளிக்கணக்கில் லோ தோல்வியடைந்தார். இருப்பினும், ஆசிய விளையாட்டுப் பூப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் சிங்கப்பூரர் எனும் பெருமை லோவைச் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன், 2006ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மகளிர் அணி வென்ற வெண்கலப் பதக்கமே ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பூப்பந்துப் போட்டியில் சிங்கப்பூருக்குக் கிடைத்த ஒரே பதக்கமாக இருந்தது.
1962ஆம் ஆண்டில் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சீனாவும் இந்தோனீசியாவும் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான தங்கப் பதக்கத்தைத் தொடர்ந்து கைப்பற்றி வந்தன.
1970ஆம் ஆண்டில் மலேசியாவின் பஞ்ச் குணாளன் தங்கப் பதக்கம் வென்றார்.
உலகத் தரவரிசையில் 14வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்ஷயா சென், 48வது இடத்தில் உள்ள மலேசிய வீரர் ஜஸ்டின் ஹோ, முதல் இடத்தில் உள்ள இந்தோனீசிய வீரர் ஜோனத்தன் கிறிஸ்டி, தென்கொரியாவின் யூ டே பின் ஆகியோரை வீழ்த்தி லோ இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றார்.
இதற்கிடையே, லோ வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து தமது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம், “பாராட்டுகள், லோ கியன் இயூ! இன்று மாலை உலகின் இரண்டாம் நிலை வீரரான தாய்லாந்தின் குன்வாலுட் விடிட்சார்னிடம் தோல்வியடைவதற்கு முன்பு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையை அவர் பெற்றார். தமது வெள்ளிப் பதக்கத்தை வென்ற வழியில், கியன் இயூ இந்தோனீசியாவின் உலகின் முதல் நிலை வீரரான ஜோனத்தன் கிறிஸ்டியைத் தோற்கடித்திருந்தார்.
“கியன் இயூவுக்கு 29 வயதாகிறது, ஆனால் அவர் உச்சத்தில் போராடுவதை இன்னும் நிறுத்தவில்லை. மேலும், 2021ல் உலக வெற்றியாளர் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றதையும், கடந்த 60 ஆண்டுகளில் பேட்மிண்டனில் மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள சிங்கப்பூரர் என்ற பெருமையையும் யாராலும் பறிக்க முடியாது,” என்று தெரிவித்தார்.
