இறுதிச்சுற்றில் பிரெஞ்சு வீரரிடம் லோ கியன் இயூ அதிர்ச்சித் தோல்வி

சிங்கப்பூர் பொது விருது பூப்பந்துப் போட்டி

இறுதிச்சுற்றில் பிரெஞ்சு வீரரிடம் லோ கியன் இயூ அதிர்ச்சித் தோல்வி

1 mins read
3539d235-8af4-46aa-ac26-b4106d6f12eb
சிங்கப்பூர் பொது விருது பூப்பந்துப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் வெற்றியாளர் அலெக்ஸ் லானியருடன் சிங்கப்பூரின் லோ கியன் இயூ (இடது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பொது விருது பூப்பந்துப் போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூர் வீரர் ஒருவர் வெற்றியாளர் பட்டம் வெல்வதற்கான நீண்ட காத்திருப்பு தொடர்கிறது.

ஞாயிற்றுக்கிழமை (மே 31) நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிச்சுற்றில், சிங்கப்பூரின் நட்சத்திர வீரர் லோ கியன் இயூ, பிரான்சின் அலெக்ஸ் லானியரிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், உலகத் தரவரிசையில் 9ஆம் இடத்தில் உள்ள லானியர், 17-21, 21-15, 21-14 என்ற ஆட்டக் கணக்கில் 74 நிமிடங்களில் லோவை வீழ்த்தினார்.

21 வயது லானியர், உலகத் தரவரிசையில் 14ஆம் இடத்தில் இருக்கும் லோவை எதிர்கொண்ட நான்கு ஆட்டங்களில் பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும்.

சிங்கப்பூர் பொது விருதுப் போட்டியில் கடைசியாக 1962ல் வீ சூன் செங், ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெற்றியாளர் பட்டம் வென்றிருந்தார். அதன் பின்னர், 2002ல் ரோனல்ட் சுசிலோ இறுதிச்சுற்று வரை முன்னேறியும் கிண்ணத்தைக் கைவிட்டார். மகளிர் இரட்டையர் பிரிவில் ஷிந்தா முலியா சாரி, யாவ் லெய் இணை 2010ல் பட்டம் வென்றதே இப்போட்டியில் சிங்கப்பூரின் கடைசிச் சாதனையாக உள்ளது.

தமது சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரின் இறுதிச்சுற்றுக்கு லோ தகுதிபெற்றது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர், 2022ல் அவர் அரையிறுதி வரை முன்னேறியதே அவரது ஆகச் சிறந்த செயல்பாடாக இருந்தது. அப்போது இந்தோனீசியாவின் அண்டனி ஜின்திங்கிடம் அவர் தோல்வியுற்றார்.

குறிப்புச் சொற்கள்