ஒளிமயமான 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பானியக் காற்பந்து நட்சத்திரம் ஓய்வு

2 mins read
லயனல் மெஸ்ஸி, ஸாவி ஹெர்னாண்டஸ் புகழாரம்
eb2fd549-516d-406a-b6b3-a72d6b1d1d15
2010 உலகக் கிண்ணத் தொடரில், நெதர்லாந்திற்கு எதிரான இறுதிப் போட்டியின் கூடுதல் நேரத்தில் கோலடித்து ஸபெயின் அணிக்குக் கிண்ணம் வென்று தந்த ஆண்ட்ரெஸ் இனியஸ்டா. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

மட்ரிட்: ஸ்பெயின், பார்சிலோனா காற்பந்துக் குழுக்களின் நட்சத்திர ஆட்டக்காரராக ஒளிர்ந்த ஆண்ட்ரெஸ் இனியஸ்டா, 40, ஒரு விளையாட்டாளராகத் தமது ஓய்வை அறிவித்துள்ளார்.

மத்தியத் திடல் ஆட்டக்காரரான இனியஸ்டா, 2000களின் பிற்பகுதியிலும் 2010களின் தொடக்கத்திலும் புகழின் உச்சியில் இருந்தார்.

ஸ்பெயின் தேசிய அணிக்காக 131 முறை களமிறங்கியுள்ள இவர், 2010 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட ஒரே கோலுக்குச் சொந்தக்காரர்.

அத்துடன், 2008, 2012 ஆண்டுகளில் நடந்த யூரோ போட்டிகளில் கிண்ணம் வென்ற ஸ்பெயின் அணியிலும் இவர் இடம்பெற்றிருந்தார். 2012 யூரோ கிண்ணத்தின் தொடர்நாயகன் விருதையும் இவரே வென்றார்.

தமது 12ஆவது வயதில் பார்சிலோனா குழுவின் இளையர் பயிலகத்தில் இணைந்த இனியஸ்டா, அக்குழுவிற்காக 674 முறை களமிறங்கியுள்ளார்.

ஸ்பானிய லா லீகா (ஒன்பது முறை), சாம்பியன்ஸ் லீக் (நான்கு முறை), ஸ்பானிய அரசர் கிண்ணம் (ஆறு முறை), யுயேஃபா சூப்பர் கிண்ணம் (இரண்டு முறை), குழு உலகக் கிண்ணம் (மூன்று முறை) என இவரது கிண்ணப் பட்டியல் நீள்கிறது.

“எனது காற்பந்துப் பயணத்தையும் அப்பயணத்தில் என்னோடு இருந்தவர்களையும் நினைத்துப் பெருமையாக இருக்கிறது,” என்று உணர்ச்சிமேலிடக் கூறினார் இனியஸ்டா.

இவரது வெற்றிப் பயணத்தில் பெரும்பாலும் உடனிருந்த முன்னாள் ஸ்பானிய, பார்சிலோனா வீரரான ஸாவி ஹெர்னாண்டஸ், “ஸ்பானியக் காற்பந்து வரலாற்றிலேயே ஆகச் சிறந்த வீரர், மாபெருந்திறனாளரான இனியஸ்டாதான்,” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

பார்சிலோனாவில் இனியஸ்டாவுடன் இணைந்து விளையாடிய அர்ஜென்டினா அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி, “இனியஸ்டாவுடன் இணைந்து விளையாடியது வாழ்வின் மகிழ்ச்சிமிக்க காலம்! பந்து அவரை இழந்து தவிக்கும்!” என்று தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் ஜப்பானின் விசெல் கோபே குழுவிற்காக விளையாடி வந்த இனியஸ்டா, தம்மால் காற்பந்தைவிட்டு விலகியிருக்க முடியாது என்கிறார்.

“காற்பந்துதான் என் வாழ்க்கை. இனியும் அது தொடரும்,” என இனியஸ்டா கூறியுள்ளதால், அவரைக் காற்பந்துப் பயிற்றுநராகப் பார்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என நம்பலாம்.

குறிப்புச் சொற்கள்