மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் ஹேரி மெகுவாயர், இங்கிலாந்து அணிக்குத் திரும்ப அழைக்கப்படுவதற்குத் தகுதியானவர். மேலும் அவரது தலைமைத்துவ திறன்கள் தேசிய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அக்குழுவின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரூபன் அமோரிம் தெரிவித்துள்ளார்.
64 முறை இங்கிலாந்துக்காக விளையாடியுள்ள 31 வயது மெகுவாயர், ஜெர்மனியில் நடந்த 2024 ஐரோப்பிய வெற்றியாளர் போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்படாத உயர்மட்ட வீரர்களில் ஒருவர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த இங்கிலாந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
2023ஆம் ஆண்டில் முன்னாள் நிர்வாகி எரிக் டென் ஹாக்கால், அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மெகுவாயர், இந்தப் பருவத்தில் யுனைடெட் அணிக்காக மிகவும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த மாதம் லெஸ்டர் சிட்டிக்கு எதிரான எஃப்ஏ கிண்ண நான்காம் சுற்று ஆட்டத்திலும் இப்ஸ்விச் டவுனுக்கு எதிரான பிரிமியர் லீக் ஆட்டத்திலும் வெற்றிக் கோல்களைப் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து தேசிய அணியின் தற்போதைய நிர்வாகி தாமஸ் டுச்சல், இம்மாதம் அல்பேனியா, லாட்வியா குழுக்களுக்கு எதிராக ஆடப்போகும் இங்கிலாந்து குழுவில் இடம்பெறவுள்ளோரின் பெயர்களை விரைவில் வெளியிடவிருக்கிறார்.
“தேசிய அணி நிர்வாகி, மெகுவாயருக்கு இன்னொரு வாய்ப்பளித்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அவர் அதற்கு தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன்,” என்று அமோரிம் செய்தியாளர்களிடம் கூறினார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது.