தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொய்யான பிறப்புத் தகவல்களைச் சமர்ப்பித்த மலேசியக் காற்பந்து வீரர்கள்: ஃபிஃபா

2 mins read
5e004716-a125-4805-9dba-e43b54b55938
தடை செய்யப்பட்ட ஏழு வீரர்களும் தங்களுடைய தாத்தாக்கள் மலேசியாவில் பிறந்தவர்கள் என்று பொய்யான பிறப்புத் தகவல்களைச் சமர்ப்பித்தனர். - படம்: ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: அனைத்துலக காற்பந்துச் சம்மேளமான ஃபிஃபா, அண்மையில் ஏழு மலேசியக் காற்பந்து வீரர்களை ஓராண்டுக்குத் தடை செய்தது.

தடை செய்யப்பட்ட வீரர்கள் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக அப்போது கூறப்பட்டது. மேலும் மலேசியக் காற்பந்துச் சங்கத்திற்கும் தடை செய்யப்பட்ட வீரர்களுக்கும் ஃபிஃபா அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபிஃபா நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக மலேசியக் காற்பந்துச் சங்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஃபிஃபா திங்கட்கிழமை (அக்டோபர் 6) ஆவண மோசடிகுறித்து முழுமையான தகவல்களை வெளியிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட ஏழு வீரர்களும் தங்களுடைய தாத்தாக்கள் மலேசியாவில் பிறந்தவர்கள் என்று பொய்யான பிறப்புத் தகவல்களைச் சமர்ப்பித்தனர்.

ஆனால் ஃபிஃபா நடத்திய விசாரணையில் அந்த ஏழு வீரர்களின் தாத்தாக்களும் ஸ்பெயின், அர்ஜென்டினா, பிரேசில், நெதர்லாந்தில் பிறந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது.

தற்போது தடைசெய்யப்பட்ட வீரர்களில் கேபிரியல் பெலிப்பே அரோச்சா, பக்குண்டோ தாமஸ் கார்செஸ், ஜான் ஈராஸ்பல் ஆகிய மூவரும் ஸ்பெயினில் பிறந்தவர்கள்.

ஹெக்டர் அலென்ஜான்ரோ நெதர்லாந்தில் பிறந்தவர். ஜோவ விட்டர் பிராண்டோ பிகுரிடோ பிரேசிலில் பிறந்தவர்.

ராட்ரிகோ ஜூலியன் ஹொல்காடோ மற்றும் இமானுல் ஜேவியர் மச்சுகா அர்ஜென்டினாவில் பிறந்தவர்கள்.

இந்த ஏழு வீரர்களும் தற்போது மலேசியக் குடியுரிமை வைத்துள்ளனர்.

இந்த ஏழு வீரர்களின் தடையால் மலேசியா ஆசியக் கிண்ணத்திற்குத் தகுதிபெறுவதில் சிக்கல் ஏற்படலாம். மலேசியா மாற்று வீரர்களைத் தற்போது அறிவித்துள்ளது.

லாவோஸ் அணிக்கு எதிராக மலேசியா வியாழக்கிழமை (அக்[Ϟ]டோபர் 9) விளையாடவுள்ளது.

இதற்கிடையே ஃபிஃபாவின் தடைக்கு எதிராகத் தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்படும் என்று மலேசியக் காற்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஆசியக் கிண்ணக் காற்பந்துப்போட்டிக்கான தகுதி ஆட்டத்தில் மலேசியாவும் வியட்னாமும் மோதின.

அந்த ஆட்டத்தில் விளையாடிய மலேசிய வீரர்கள் தொடர்பான ஆவணங்களில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஃபிஃபா கண்டறிந்தது.

வியட்னாமிற்கு எதிராகத் தடை செய்யப்பட்ட அந்த எழு வீரர்களும் விளையாடினர். அந்த ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியா வெற்றிபெற்றது.

ஃபிஃபா விதிமுறைப்படி, ஒரு நாட்டிற்கு விளையாட விரும்பும் வீரர் பிறப்பால் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும் அல்லது சில முக்கியமான விதிமுறைகளை அந்த வீரர் பின்பற்றி இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் ஒரு நாட்டைப் பிரதிநிதித்து விளையாட முடியும்.

குறிப்புச் சொற்கள்