எதிரணி ஆடும் விதத்தை ரசிக்கும் மேன்யூ நிர்வாகி

எதிரணி ஆடும் விதத்தை ரசிக்கும் மேன்யூ நிர்வாகி

2 mins read
b3c3f52e-e0a8-497e-819c-ab78c5c60098
மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு நிர்வாகி எரிக் டென் ஹாக். - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: தமது குழு துடிப்புடன் விளையாட வேண்டும் என விரும்புகிறார் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் நிர்வாகி எரிக் டென் ஹாக்.

அவ்வகையில், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அத்தகைய ஆட்ட பாணியில் விளையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுனைடெட் - ஸ்பர்ஸ் குழுக்கள் மோதும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த டென் ஹாக், ஸ்பர்ஸ் நிர்வாகி போஸ்டகாக்லோவை வெகுவாகப் பாராட்டினார்.

“ஸ்பர்ஸ் குழு ஆடும் பாணியையே மாற்றிவிட்டார் போஸ்டகாக்லோ. ஸ்பர்ஸ் குழுவினர் துடிப்புடன், செயலூக்கத்துடன் விளையாடி வருகின்றனர். அவர்களின் ஆட்டம் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது,” என்றார் டென் ஹாக்.

இவ்விரு குழுக்களும் கடந்த ஆகஸ்ட் மாதம் மோதிய பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழு 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.

அந்த ஆட்டத்தில் முதல் 35 நிமிடங்களுக்குத் தமது குழு ஆதிக்கம் செலுத்தியதாகக் குறிப்பிட்ட டென் ஹாக், ஆயினும் அதன்பின் ஆட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து, கோல் வாய்ப்புகளைத் தவறவிட்டதாக அவர் சொன்னார்.

பல முன்னணி ஆட்டக்காரர்கள் காயமடைந்திருந்த நிலையில், முக்கியத் தற்காப்பு ஆட்டக்காரரான லிசாண்ட்ரோ மார்ட்டினஸ், ஸ்பர்சுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, கேசமிரோவும் லூக் ஷாவும் பயிற்சிக்குத் திரும்பியுள்ளனர். உடல்நலம் குன்றியிருந்த கிறிஸ்டியன் எரிக்சனும் தேறிவிட்டார்.

இவையெல்லாம் நிர்வாகி டென் ஹாக்கிற்குக் கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளன.

இதனிடையே, யுனைடெட்டின் சொந்த அரங்கிலேயே அதனைத் தோற்கடித்து, பட்டியலின் நான்காமிடத்திற்கு முன்னேறும் முனைப்புடன் உள்ளது ஸ்பர்ஸ் குழு.

ஜெர்மானியத் தாக்குதல் ஆட்டக்காரர் டிமோ வெர்னரும் ருமேனியத் தற்காப்பு ஆட்டக்காரர் ராது டிராகுசினும் இவ்வாரம் ஸ்பர்ஸ் குழுவுடன் இணைந்தனர்.

கிறிஸ்டியன் ரொமேரோ, ஜேம்ஸ் மேடிசன் உள்ளிட்டோரும் கிட்டத்தட்ட காயத்திலிருந்து மீண்டுள்ளதால் அடுத்துவரும் ஆட்டங்களில் தங்களால் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்று நம்புகிறார் போஸ்டகாக்லோ.

அத்துடன், பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள குழுக்களில் தமது குழுவும் இருப்பதாக அவர் உறுதியாக நம்புகிறார்.

தற்போது 39 புள்ளிகளுடன் ஸ்பர்ஸ் ஐந்தாமிடத்திலும் 31 புள்ளிகளுடன் யுனைடெட் எட்டாமிடத்திலும் உள்ளன. லிவர்பூல் 45 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்