லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டும் ஆஸ்டன் வில்லாவும் அக்டோபர் 6ஆம் தேதியன்று மோதிய ஆட்டம் கோல் ஏதும் இன்றி சமநிலையில் முடிந்தது.
கடந்த ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் வெற்றி பெறவில்லை. இருப்பினும், ஆஸ்டன் வில்லாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமது ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடியதாக யுனைடெட்டின் நிர்வாகி எரிக் டென் ஹாக் தெரிவித்தார்.
லீக் பட்டியலில் யுனைடெட் 14வது இடத்தில் உள்ளது. இப்பருவத்தில் அக்குழு இதுவரை ஏழு ஆட்டங்களில் களமிறங்கியுள்ளது. இரண்டு ஆட்டங்களில் மட்டுமே யுனைடெட் வெற்றி பெற்றுள்ளது.
எதிர்பார்த்த அளவுக்கு யுனைடெட் செயல்படாததால் டென் ஹாக்கின் பதவிக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறாததால் லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்கு முன்னேறும் வாய்ப்பை ஆஸ்டன் வில்லா தவறவிட்டது.
அக்டோபர் 2ஆம் தேதியன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் காற்பந்தாட்டத்தில் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கை ஆஸ்டன் வில்லா 1-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்டன் வில்லா தற்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மற்றோர் ஆட்டத்தில் செல்சியும் நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுவும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன. பிற்பாதி ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களில் ஃபாரஸ்ட் குழு கோல் போட்டு முன்னிலை வகித்தது. மனந்தளராது போராடிய செல்சி கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆட்டம் முடிய கிட்டத்தட்ட 12 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது, ஃபாரஸ்ட் குழுவின் ஆட்டக்காரர் ஒருவருக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இதையடுத்து, ஆட்டத்தின் கடைசிகட்டத்தில் ஃபாரஸ்ட் வெறும் பத்து ஆட்டக்காரர்களுடன் விளையாடியது. இருப்பினும், செல்சியால் வெற்றி கோலைப் போட முடியாமல் போனது.
ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரைட்டன் குழு 3-2 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இடைவேளையின்போது ஸ்பர்ஸ் 2-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது. பிற்பாதி ஆட்டத்தில் பிரைட்டன் கோல் மழை பொழிந்து ஆட்டத்தைக் கைப்பற்றியது.