மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 3-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது லிவர்பூல்.
அபாரமாக விளையாடிய லிவர்பூலுக்கு லுயிஸ் டியாஸ் இரண்டு கோல்களையும் முகம்மது சாலா ஒரு கோலையும் போட்டனர். யுனைடெட்டின் பிரேசிலிய வீரர் கசமியரோவின் தவறுகளால் லிவர்பூலின் முதல் இரு கோல்கள் விழுந்தன.
ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 1) யுனைடெட்டின் ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தின் முற்பாதியில் கோல் எண்ணிக்கை 2-0 என இருந்தது. பிற்பாதியாட்டத்தில் சாலா லிவர்பூலின் மூன்றாவது கோலைப் போட்டார்.
புதிய பிரிமியர் லீக் பருவம் தொடங்கி முதல் மூன்று ஆட்டங்களில் வென்றதுடன் இதுவரை ஒரு கோலையும் விட்டுக்கொடுக்கவில்லை லிவர்பூல். மாறாக யுனைடெட், முதல் மூன்று ஆட்டங்களில் இரண்டு கோல்களைப் போட்டு ஐந்து கோல்களை விட்டுக்கொடுத்ததுடன் இரு ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது.
ஆட்டம் முடிந்த பின் சாலா, இதுவே லிவர்பூலில் தான் விளையாடவிருக்கும் கடைசி பருவம் எனக் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தார்.
முன்னாள் செல்சி வீரரான சாலா, 2017ஆம் ஆண்டு லிவர்பூலில் சேர்ந்து நட்சத்திரமாக ஜொலித்து வந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்ற பிரிமியர் லீக் ஆட்டங்களில் செல்சி, கிறிஸ்டல் பேலசுடன் 1-1 என சமநிலை கண்டது, டாட்டன்ஹம் ஹாட்ஸ்பரை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது நியூகாசல் யுனைடெட்.

