லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஆர்சனலை 3-2 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் தோற்கடித்தது.
இந்த ஆட்டம் ஆர்சனலின் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் ஆர்சனல் வெற்றி பெற்றிருந்தால் லீக் பட்டியலில் அது மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஆஸ்டன் வில்லாவைவிட ஏழு புள்ளிகள் அதிகம் பெற்றிருக்கும்.
ஆனால் தற்போது அது 50 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டியைவிட நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னணி வகிக்கிறது.
ஆர்சனலை வீழ்த்தியதன் மூலம் லீக் பட்டியலில் நான்காவது இடத்துக்கு யுனைடெட் முன்னேறியுள்ளது.
இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக மைக்கல் கேரிக் பதவி ஏற்றதிலிருந்து யுனைடெட் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் யுனைடெட்டின் லிசாண்ட்ரோ மார்ட்டினேஸ் போட்ட சொந்த கோல் மூலம் ஆர்சனல் முன்னிலை வகித்தது.
எனினும், ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் ஆர்சனலின் மார்ட்டின் ஸுபிமெண்டி செய்த பிழையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி யுனைடெட்டின் பிரயன் எம்பியூமோ கோல் போட்டு ஆட்டத்தைச் சமப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் யுனைடெட்டின் டோர்கு கோல் போட்டு யுனைடெட்டை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
ஆனால், கிடைத்த கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி ஆர்சனல் ஆட்டத்தைச் சமன் செய்தது.
யுனைடெட்டின் குன்ஹா அனுப்பிய பந்து வலையைத் தொட, அதுவே அக்குழுவின் வெற்றி கோலாக அமைந்தது.

