லண்டன்: அதிக எதிர்பார்ப்புகளுடன் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தை தொடங்கிய மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஏமாற்றமும் தடுமாற்றமும் தான் மிஞ்சியுள்ளன.
பருவத்தை வெற்றியுடன் தொடங்கிய யுனைடெட் அணிக்கு அதன் பின்னர் எதுவும் சரியாக அமையவில்லை.
இப்பருவத்தில் இதுவரை ஆறு ஆட்டங்களில் விளையாடியுள்ள யுனைடெட் அணி 2 வெற்றி, 3 தோல்வி, 1 சமநிலை என 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 13வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், அந்த அணி ஞாயிற்றுக்கிழமை, புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ள ஆஸ்டன் வில்லாவுடன் மோதுகிறது.
ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும்.
கடந்த ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரிடம் 3-0 என்று படுதோல்வியடைந்த மான்செஸ்டர் யுனைடெட், ஆஸ்டன் வில்லாவுக்கு எதிராக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பல நட்சத்திர வீரர்களை வாங்கியும் போதிய வெற்றிகள் இல்லாததால் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக் பெரிய அளவில் நெருக்குதலை எதிர்நோக்குகிறார். அதனால் இந்த ஆட்டம் அவருக்கும் முக்கியமானது என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
“இந்தப் பருவம் முடியும்போது எங்களின் விளையாட்டை விமர்சனம் செய்யுங்கள். நாங்கள் மேம்படுவோம்,” என்று டென் ஹாக் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் செல்சி அணியும் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணியும் மோதுகின்றன.
தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள செல்சி இந்த ஆட்டத்தையும் வெல்லும் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இரவு 11 மணிக்கு நடக்கும் மற்றோர் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணியும் பிரைட்டன் அணியும் விளையாடுகின்றன.
முன்னணி அணிகளை திடீரென வீழ்த்தும் பலம் கொண்ட பிரைட்டன் அணி டோட்டன்ஹம் அணிக்கு எதிராக சமநிலையை அடைய போராடக்கூடும்.
டோட்டன்ஹம் அணி வெற்றியைக் குறிவைத்து களமிறங்கும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கலாம்.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் லிவர்பூல் குழு முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் 14 புள்ளிகளுடன் நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் சிட்டி உள்ளது. 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் ஆர்சனல் அணி இருக்கிறது.