தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெற்றிப் பாதைக்கு மாற நினைக்கும் மான்செஸ்டர் யுனைடெட்

2 mins read
3c113f77-149d-4358-9832-b1f93d085210
லீக் கிண்ணப் போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டியை வீழ்த்திய உற்சாகத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் முன்னணி அணியாக வலம் வந்த மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கு இப்பருவம் சரியாக அமையவில்லை.

தொடர் தோல்விகளாலும் வெற்றிகளை குவிக்க முடியாமலும் அக்குழு திணறி வருகிறது. இதுவரை ஒன்பது ஆட்டங்களை விளையாடிய யுனைடெட், புள்ளிப் பட்டியலில் 14வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் அக்குழுவின் நிர்வாகி எரிக் டென் ஹாக், பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதில் போர்ச்சுகீசியக் குழுவான ஸ்போர்ட்டிங் லிஸ்பனின் நிர்வாகியான ரூபன் அமோரிம், அடுத்த யுனைடெட் நிர்வாகியாக தேர்தெடுக்கப்பட்டார்.

39 வயது ரூபன் நவம்பர் 11ஆம் தேதி யுனைடெட் குழுவுக்கு நிர்வாகியாக பொறுப்பேற்பார். அவர் 2027ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரூபன் அணியில் இணையும் வரை இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக ரூட் வான் நிஸ்டெல்ரோய் பொறுப்புவகிப்பார்.

இதற்கிடையே, மான்செஸ்டர் யுனைடெட் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப்பின் செல்சி அணியுடன் மோதுகிறது.

ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி பின்னிரவு 12.30 மணிக்கு (நவம்பர் 4) ஓல்ட் டிராஃபர்ட் அரங்கத்தில் நடக்கிறது.

சில நாள்களுக்கு முன்னர் யுனைடெட், ரூட் வான் நிசல்ரோய் தலைமையில் ‘லீக்’ கிண்ணப் போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.

யுனைடெட் வீரர்கள் துடிப்புடன் விளையாடிதைப் பார்க்க முடிந்தது, இருப்பினும் பலம் வாய்ந்த செல்சி அணிக்கு எதிராக யுனைடெட் சிரமப்படலாம் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஓல்ட் டிராஃபர்ட் அரங்கத்தில் செல்சி அணியுடன் விளையாடிய கடைசி 11 ஆட்டங்களில் யுனைடெட் தோல்வியை தழுவவில்லை.

ஐந்து வெற்றி, ஆறு சமநிலை என்று யுனைடெட் ஓல்ட் டிராஃபர்ட் அரங்கத்தில் நம்பிக்கையுடன் செயல்பட்டுள்ளது. அதனால் இந்த ஆட்டத்தில் யுனைடெட் வெற்றிபெற முயற்சி செய்யலாம்.

செல்சி அணிக்கு கோல் பாமர் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். அவர் இப்பருவத்தில் கோல் மழை பொழிந்து வருகிறார். அதனால் அவரைக் கட்டுப்படுத்த மான்செஸ்டர் யுனைடெட் முயலும்.

தற்போது புள்ளிப் பட்டியலில் 17 புள்ளிகளுடன் ஐந்தாம் நிலையில் உள்ள செல்சி, பருவத்தை முதல் நான்கு இடங்களில் முடிக்க எண்ணம் கொண்டுள்ளது. அதனால் இப்போட்டியை வெல்ல அது கடுமையாகப் போராடும்.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 23 புள்ளிகளுடன் நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் சிட்டி முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் 22 புள்ளிகளுடன் லிவர்பூல் உள்ளது. 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் ஆர்சனல் அணி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்