பாரிஸ்: இந்தியத் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாவது வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியா விடுதலை அடைந்த பிறகு, இந்தியர் ஒருவர் ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்களைக் கைப்பற்றியிருப்பது இதுவே முதன்முறை.
பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் ஏற்கெனவே வெண்கலப் பதக்கம் வென்றிருந்த மனு, செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 30) அதே போட்டியின் கலப்புப் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
மனு - சரப்ஜோத் இணை 16-10 என்ற புள்ளிக் கணக்கில் கொரிய இணையை வீழ்த்தியது.
நடப்பு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்குக் கிட்டிய இரண்டாவது பதக்கமும் இதுதான்.
இதன்மூலம், பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளார் மனு.
ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற முதலாவது இந்தியப் பெண், ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர், ஒலிம்பிக் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர், நாடு விடுதலை அடைந்த பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களைக் கைப்பற்றிய முதல் இந்தியர், தனிநபர் பிரிவிலும் குழுப் பிரிவிலும் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆகியவை மனு படைத்த சாதனைகளுள் சில.
அத்துடன், பூப்பந்து வீராங்கனை பி.வி. சிந்துக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற இந்தியப் பெண் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார் மனு.