பேங்காக்: வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அன்று நடைபெற்ற பெண்களுக்கான குமிட்டே 55 கிலோ கராத்தே இறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் மரிசா ஹஃபீசன் வென்றுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் முதலாவது கராத்தே தங்கப் பதக்கத்தை மரிசா ஹஃபீசன் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
1993ஆம் ஆண்டு சிங்கப்பூர் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்தியபோது, பெண்களுக்கான குமிட்டே 60 கிலோ பிரிவு போட்டியில் நியோ ஆ சுவான் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் மரிசாவின் வெற்றி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வில் சிங்கப்பூர் பங்கேற்ற கராத்தே போட்டியில் 14 ஆண்டுகால பதக்க வறட்சியையும் முடிவுக்குக் கொண்டுவந்தது.
சேங் வத்தனா அரசு வளாகத்தில், முதல் முறையாகப் பங்கேற்கும் 19 வயதான சிங்கப்பூர் வீராங்கனை, இறுதிப் போட்டியில் வியட்னாமின் நுயென் தி டியு லையை 5-3 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார். முந்தைய சுற்றுகளில் பிலிப்பீன்சின் மரியான் ஜெனெல்லே, லாவோசின் சிசவ்பன்தோங் மன்வான் ஆகியோரை மரிசா தோற்கடித்தார்.
டிசம்பர் 9 முதல் 20ஆம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டிகளில், நீச்சல், ஜூ-ஜிட்சு, தெக்வாண்டோ, படகு வலித்தல், திடல்தடப் போட்டிகள் ஆகியவற்றில் கிடைத்த முந்தைய வெற்றிகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் பெறும் 10வது தங்கப் பதக்கம் இதுவாகும்.
2023ஆம் ஆண்டு கம்போடியாவில் நடந்த 32வது சீ விளையாட்டுப் போட்டிகளில், சிங்கப்பூர் அணி 51 தங்கம், 43 வெள்ளி மற்றும் 64 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

