‘சிங்கப்பூர் அட்ராய்ட்’ (Singapore Adroit) உள்ளூர்க் கூடைப்பந்து அணிக்கு முன்னர் விளையாடிய வெளிநாட்டவர் இருவருக்கு, ஆட்ட முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயித்ததன் தொடர்பில், அனைத்துலகக் கூடைப்பந்துக் கூட்டமைப்பு (ஃபீபா) வாழ்நாள் தடையை விதித்துள்ளது.
சிங்கப்பூர்க் கூடைப்பந்துச் சங்கம் ஜூலை 15ஆம் தேதி அந்தத் தகவலைத் தெரிவித்தது.
‘நியூ தைப்பே கிங்ஸ் இன்டர்நேஷனல்’ குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் உக்ரேனியர்களான ஒலெக்சாண்டர் கொல்செங்கோவும் செர்கீ ப்ரீமாக்கும் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டதாகச் சங்கம் கூறியது.
அதோடு, கொல்செங்கோ, சென்ற ஆண்டு மே மாதம் நடைபெற்ற கூடைப்பந்து வெற்றியாளர் லீக் (பிசிஎல்) போட்டியில், ‘ஹை டெக்’ அணிக்கு எதிரான ஆட்டத்தில் முறைகேடு செய்ததாகவும் அது தெரிவித்தது.
‘பிசிஎல் ஆசியா-கிழக்குப்’ போட்டியில், கிழக்கு, தென்கிழக்காசிய வட்டாரங்களைச் சேர்ந்த முன்னணிக் குழுக்கள் பங்கேற்கின்றன.
சென்ற ஆண்டு மே 2,7ஆம் தேதிகளில் ‘ஹை டெக்’ அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும், ஒவ்வோர் ஆட்டத்திற்கும் கொல்செங்கோ 10 புள்ளிகளைப் பெற்றார். அதே வேளையில், ‘நியூ தைப்பே கிங்ஸ் இன்டர்நேஷனல்’ அணிக்கு எதிரான இரண்டு ஆட்டங்களில், அவர் மொத்தம் 23 புள்ளிகளை எடுத்திருந்ததாக ‘ஃபீபா’ இணையத்தளத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் காட்டின.
ப்ரீமாக் ‘நியூ தைப்பே கிங்ஸ் இன்டர்நேஷனல்’ அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு ஆட்டங்களில் மொத்தம் 14 புள்ளிகளைக் கைப்பற்றியிருந்தார்.
மே 20ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘ஃபீபா’ தீர்ப்பின்படி, ‘ஃபீபா’ அல்லது ‘ஃபீபா’ தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் பங்கேற்க அந்த இருவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடை சிங்கப்பூர்க் கூடைப்பந்துச் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் பொருந்தும்.

