நியூயார்க்: அமெரிக்க தேசிய காற்பந்து அணி, உலகக் கிண்ணத்தை வெல்லும் இலக்குடன் செயல்படவேண்டும் என்கிறார் அதன் புதிய பயிற்றுவிப்பாளர் மொரிச்சியோ பொக்கெட்டினோ.
டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், செல்சி, பிஎஸ்ஜி உள்ளிட்ட குழுக்களின் நிர்வாகியாக இருந்த பொக்கெட்டினோ அமெரிக்காவின் புதிய நிர்வாகியாக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக் கிண்ணப் போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஏற்று நடத்துகின்றன. கிண்ணத்தை வெல்லவேண்டும் என்ற இலக்கு, தனது வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும் என நம்புகிறார் பொக்கெட்டினோ.
“நம்மால் வெல்ல முடியும் என்று நாங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும். ஓர் ஆட்டத்தில் மட்டுமின்றி உலகக் கிண்ணத்தை வெல்லும் இலக்கைக் கொண்டிருக்கவேண்டும். தொடக்கத்திலிருந்தே பெரிய இலக்குடன் விளையாட்டாளர்கள் களமிறங்கவேண்டும் என்பதே எங்களின் விருப்பம்,” என்றார் பொக்கெட்டினோ.