சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் மது குடித்ததால் மயக்கமடைந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவசர மருத்துவ வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்டதாகவும் ஆஸ்திரேலிய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) கோல்ஃப் விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேக்ஸ்வெல், பின்னர் அங்குள்ள இரவு விடுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பிரெட் லீ உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் இணைந்து உருவாக்கியுள்ள ‘சிக்ஸ் அண்ட் அவுட்’ எனும் இசைக்குழு அவ்விடுதியில் நிகழ்ச்சி படைத்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, மேக்ஸ்வெல் ‘பியர்’ அருந்தியதாகவும் அதனால் நீர்ச்சத்து குறைந்து அவர் மயக்கமடைந்ததாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக ஆஸ்திரேலிய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அதனைத் தொடர்ந்து, 35 வயதான மேக்ஸ்வெல் அவசர மருத்துவ வாகனத்தில் ‘ராயல் அடிலெய்டு’ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆயினும், அந்த இரவிலேயே அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் வெளியாகி இருக்கும் தகவல்கள் தமக்குக் கவலையளிக்கின்றன என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் கூறியதாக ‘நியூஸ்.காம்.ஏயு’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.