பாரிஸ்: ரியால் மட்ரிட் காற்பந்து நட்சத்திரமான, பிரான்சின் கிலியோன் எம்பாப்பே, இதற்கு முன்பு தான் விளையாடிய குழுவான பிரான்சின் பிஎஸ்ஜியிடமிருந்து 240 மில்லியன் யூரோ (361 மில்லியன் வெள்ளி) இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.
தகவல் தெரிந்தவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். எம்பாப்பேக்கும் பிஎஸ்ஜிக்கும் இடையே மோசமடைந்துள்ள உறவு இப்போது மேலும் கசப்படைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பாரிஸ் வேலை வாய்ப்பு நடுவர் மன்றம் ஒன்றில் எம்பாப்பேயின் வழக்கறிஞர்கள், பிஎஸ்ஜியில் இருந்த காலத்தின் கடைசிப் பகுதியில் அவர் நடத்தப்பட்ட விதத்துக்குப் பெரும் தொகை இழப்பீடாக வழங்கப்படவேண்டும் என்று வாதிட உள்ளனர்.
2023 முதல் எம்பாப்பேக்கும் பிஎஸ்ஜிக்கும் இடையிலான உறவு மோசமடையத் தொடங்கியது. அக்குழுவில் தொடர்ந்து விளையாட வகைசெய்யும் ஒப்பந்தத்தில் தான் கையெழுத்திடப் போவதில்லை என எம்பாப்பே அறிவித்ததைத் தொடர்ந்து கசப்பு ஏற்பட்டது. பிறகு சவூதி அரேபியக் குழு ஒன்றில் சேரும் வாய்ப்பை எம்பாப்பே ஏற்க மறுத்தார். அவ்வாறு அவர் செய்திருந்தால் பிஎஸ்ஜிக்கு 300 மில்லியன் யூரோ கிடைத்திருக்கும்.
பின்னர் எம்பாப்பே, பிஎஸ்ஜியுடனான ஒப்பந்தம் நிறைவடைந்ததால் கட்டணம் ஏதுமின்றி ஸ்பானிய லீக் குழுவான ரியால் மட்ரிடில் சேர்ந்தார்.
எம்பாப்பேயின் வழக்குக்குப் பதிலடியாக பிஎஸ்ஜியும் அவர் மீது 180 மில்லியன் யூரோ கேட்டு வழக்கு தொடுத்திருப்பதாகத் தகவல் தெரிந்தவர்களில் ஒருவர் குறிப்பிட்டார்.

