புலம்பெயர் ஊழியரிலிருந்து ‘டிஎன்பிஎல்’ வரை: சிங்கப்பூர் ரமேஷின் பெரும்பாய்ச்சல்

புலம்பெயர் ஊழியரிலிருந்து ‘டிஎன்பிஎல்’ வரை: சிங்கப்பூர் ரமேஷின் பெரும்பாய்ச்சல்

3 mins read
a933ab97-ebdd-4d5b-ae95-150deff72070
இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்ற தம் கனவை நனவாக்கும் வகையில், முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் ரமேஷ் காளிமுத்து, 37. - படம்: ரமேஷ் காளிமுத்து
multi-img1 of 2

வி.கே.சந்தோஷ் குமார்

கடந்த 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், கீழ்க்குடி எனும் சிற்றூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தபோது, மற்ற ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களைப்போலத் தானும் உழைத்துத் தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான் ரமேஷ் காளிமுத்தின் நோக்கமாக இருந்தது.

ஆனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 37 வயது வீரர் எவரும் கற்பனை செய்திராத ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.

சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணி வீரரான இவர், இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு டி20 தொடர்களில் ஒன்றான தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் (டிஎன்பிஎல்) 10வது பருவத்தில் ‘திருச்சி கிராண்ட் சோழாஸ்’ அணிக்காகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎல் தொடரானது இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடருக்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக விளங்கி வருகிறது.

வேலை அனுமதிச்சீட்டில் சிங்கப்பூர் வந்த ரமேஷிற்கு, இந்தத் தேர்வு ஒரு மைல்கல் என்பதைத் தாண்டி, அவரது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

‘ஆக மதிப்புமிக்க வீரர்’ விருது

கடந்த 2022ஆம் ஆண்டு புலம்பெயர் ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் ‘ஆக மதிப்புமிக்க வீரர்’ விருதை வென்றபோதுதான் ரமேஷின் திறமை முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்தது.

அப்போது, “பணம் ஈட்டுவது என் நோக்கமன்று. சிங்கப்பூர் தேசிய அணிக்காக விளையாட வேண்டும். ஒருநாள் ஐபிஎல் தொடரிலும் ஆட வேண்டும்,” என்று தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார். நீண்டநேர, கடின வேலைக்கு இடையிலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வந்த ஒருவருக்கு இது ஒரு பெருங்கனவாகவே பார்க்கப்பட்டது.

இருப்பினும், அடுத்த ஓராண்டிற்குள் இவரது கனவு நனவாகத் தொடங்கியது. 2023 அக்டோபரில் சிங்கப்பூர் தேசிய அணிக்காக அறிமுகமான ரமேஷ், தமது வலக்கை மிதவேகப் பந்துவீச்சின்மூலம் அணியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராக மாறினார். குறிப்பாக, 2024 செப்டம்பரில் நடந்த அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) டி20 உலகக் கிண்ண ஆசியத் தகுதிச்சுற்றில் குவைத் அணிக்கு எதிராக 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

கனவை நனவாக்குவதற்கான அரிய வாய்ப்பு

தற்போது ரமேஷுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாண்டிற்கான டிஎன்பிஎல் ஏலத்தில் பதிவுசெய்திருந்த 783 வீரர்களில் 56 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதில் ரமேஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.நடராஜன், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் போன்ற பல நட்சத்திரங்களை ஐபிஎல்லுக்கு அனுப்பிய பெருமை இந்தத் தொடருக்கு உண்டு. இப்போது திருச்சி அணியில் வாஷிங்டன் சுந்தர், ஆண்டனி தாஸ் போன்ற முன்னணி வீரர்களுடன் ரமேஷ் களம் பகிரவுள்ளார்.

“ரமேஷின் இந்தத் தேர்வு சிங்கப்பூர் கிரிக்கெட்டிற்குப் பெருமையான தருணம். அவரிடம் பந்தடிப்பாளர்களைத் திணறடிக்கும் வேகமும் திறமையும் உள்ளது,” என்று சிங்கப்பூர் அணியின் முன்னாள் தலைவர் சேத்தன் சூர்யவன்ஷி பாராட்டியுள்ளார்.

தற்போது ‘ஸ்ரீ சபரி எஞ்சினியரிங்’ நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உயர்ந்துள்ள ரமேஷ், ‘எம்ப்ளாய்மென்ட் பாஸ்’ அனுமதி அட்டையில் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

கடின உழைப்பும் திறமையும் இருந்தால் சமூக, பொருளியல் தடைகளைத் தாண்டி சாதிக்கலாம் என்பதற்கு வாழும் முன்மாதிரியாகத் திகழ்கிறார் ரமேஷ். ஒரு காலத்தில் கடினமான உடலுழைப்புக்கு இடையே மாலையில் பயிற்சி பெற்ற இந்தப் புலம்பெயர் ஊழியருக்கு, அவர் கண்ட ஐபிஎல் கனவுப் பாலம் இனி கடக்கும் தொலைவுதான்!

குறிப்புச் சொற்கள்
கிரிக்கெட்ஐபிஎல்சிங்கப்பூர்