அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகம்மது ரிஸ்வான் உலக சாதனையை நழுவவிட்டார்.
ஆட்டத்தில் ரிஸ்வான் ஆறு ‘கேட்ச்’களை பிடித்து அசத்தினார். அவருக்கு ஏழாவது ‘கேட்ச்’ பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஆடம் ஸாம்பா கொடுத்த ‘கேட்சை’ ரிஸ்வான் பிடிக்கத் தவறினார்.
இதனால் உலக சாதனை வாய்ப்பைக் கோட்டை விட்டார் ரிஸ்வான். கூடுதலாக ஒரு கேட்சைப் பிடித்திருந்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 7 கேட்ச்கள் பிடித்தவர் என்ற புதிய விக்கெட் கீப்பிங் உலக சாதனை புரிந்திருப்பார் ரிஸ்வான்.
ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர், டி காக், சர்ஃபராஸ் அகமது உள்ளிட்ட விக்கெட் கீப்பர்கள் ஒரே ஆட்டத்தில் ஆறு ‘கேட்ச்’களை பிடித்த பட்டியலில் உள்ளனர். அதில் தற்போது ரிஸ்வானும் இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் ஒருநாள் போட்டிகளில் 4 முறை ஒரு இன்னிங்சில் 6 ‘கேட்ச்’களைப் பிடித்து சாதனையைத் தக்க வைத்துள்ளார்.

