தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்ஏ20 லீக்கில் கூடுதல் இந்தியர்கள் சேரவேண்டும்: ஆலன் டோனல்ட் நம்பிக்கை

2 mins read
970fbc32-ccff-41a9-9c75-6fe919c9e4da
எஸ்20 லீக்கில் பங்கேற்கும் முதல் இந்திய வீரரான தினே‌ஷ் கார்த்திக். - படம்: msn.com / இணையம்

புதுடெல்லி: தென்னாப்பிரிக்காவின் டி20 கிரிக்கெட் லீக்கான எஸ்ஏ20 லீக்கில் கூடுதல் இந்திய விளையாட்டாளர்கள் இடம்பெறுவர் எனத் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஆலன் டோனல்ட் கூறியுள்ளார்.

எனினும், அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கைகளில் உள்ளது என்றும் எஸ்20 லீக்கைப் பிரதிநிதிக்கும் தூதரான அவர் குறிப்பிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் ஐபிஎல் லீக்குக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது ஆகப் பெரிய டி20 லீக்காக உருவெடுப்பது எஸ்ஏ20இன் இலக்காகும். தினே‌ஷ் கார்த்திக், எஸ்ஏ20 லீக்கில் பங்கேற்கும் முதல் இந்திய வீரராவார்.

“தினே‌ஷ் கார்த்திக்கின் ஆற்றல் நம் அனைவருக்கும் தெரிந்ததே. 2016ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்தபோது அவரைக் கவனித்திருக்கிறேன். அவர் சிறந்த விளையாட்டாளர்,” என்றார் டோனல்ட்.

“தினே‌ஷ் கார்த்திக்கின் முழு ஆற்றல் இன்னும் வெளிவரவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் முக்கிய தருணங்களில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். குறிப்பாக பார்ல் (ராயல்ஸ்) அணியில் பந்தை அதிகம் சுழல வைக்கும் திடல்களுக்கு இது பொருந்தும்,” என்றும் டோனல்ட் சுட்டினார்.

எந்தெந்த இந்திய வீரர்கள் எஸ்ஏ20 லீக்கில் விளையாடவேண்டும் என்பதன் தொடர்பில் தென்னாப்பிரிக்க வீரர்கள் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

எஸ்ஏ20 போன்ற லீக்குகளில் கூடுதல் இந்திய வீரர்களைப் பங்கேற்க பிசிசிஐ அனுமதிக்குமா என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த டோனல்ட், “அதில் நான் முடிவெடுக்க முடியாது. பிசிசிஐதான் உலகின் ஆக வலுவான கிரிக்கெட் வாரியமாகும். திறமையான, இளம் இந்திய வீரர்கள் இந்த லீக்கில் பங்கேற்றால் சிறப்பாக இருக்கும்,” என்று நடுநிலையாகப் பேசினார்.

குறிப்புச் சொற்கள்