இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்றுநராக மோர்கல் நியமனம்

1 mins read
013b1004-69bd-438b-9ddc-c0c76597c77a
மோர்னே மோர்கல். - படம்: ஐபிஎல்

புதுடெல்லி: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான மோர்னே மோர்கல், இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்ற ஆண்டு நவம்பர் மாதத்துடன் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்றுநர் பொறுப்பிலிருந்து விலகினார் 30 வயதான மோர்கல். இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி ஐந்தாமிடம் பிடித்ததை அடுத்து, அதற்குச் சில நாள்களுக்குப் பிறகு மோர்கல் அவ்வணியிலிருந்து விலகினார்.

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 போட்டிகளில் கடந்த இரு பருவங்களில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராகச் செயல்பட்டார் மோர்கல்.

அப்போது, அவருடன் இணைந்து பணியாற்றிய கௌதம் காம்பீர், இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக மோர்கலை நியமிக்கப் பரிந்துரைத்ததாகக் கூறப்பட்டது.

இந்திய அணியின் முன்னாள் தொடக்கப் பந்தடிப்பாளரான காம்பீர், கடந்த ஜூலை மாதத்திலிருந்து இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.

தென்னாப்பிரிக்க அணிக்காக 12 ஆண்டுகாலம் விளையாடிய மோர்கல், 86 டெஸ்ட், 117 ஒருநாள், 44 டி20 போட்டிகளில் விளையாடி, 544 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்