தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓர் ஓட்டங்கூட சேர்க்காமல் ஆறு விக்கெட்டுகளை இழந்த இந்தியா!

2 mins read
9fb7c068-e2db-483a-8c35-69ded8503ee3
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் ஆறு விக்கெட்டுகளைச் சாய்த்த இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ். - படம்: ராய்ட்டர்ஸ்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுகளை இழந்ததன் மூலம் இந்திய அணியின் பந்தடிப்பு 2024ஆம் ஆண்டில் மோசமான தொடக்கம் கண்டுள்ளது.

இரு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோற்றுப் போனது.

இந்நிலையில், இரண்டாவது போட்டி கேப்டவுனில் புதன்கிழமை (ஜனவரி 3) தொடங்கியது.

பூவா தலையாவில் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்தடித்தது. இந்தியப் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜின் வேகத்தில் அவ்வணி சரசரவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. அவ்வணி 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. சிராஜ் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்பின் முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓட்டமேதும் எடுக்காமல் வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்களை எடுத்திருந்தது. அவ்வேளையில் 9 ஓட்டங்கள் எடுத்திருந்த கே எல் ராகுலை ஆட்டமிழக்கச் செய்தார் லுங்கி இங்கிடி.

அதன்பிறகே பேரதிர்ச்சி காத்திருந்தது!

அதே ஓவரில் இங்கிடி மேலும் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ககிசோ ரபாடா வீசிய அதற்கடுத்த ஓவரில் எஞ்சிய மூன்று விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது.

இப்படி, 11 பந்துகளில் ஓர் ஓட்டங்கூட எடுக்காமல் ஓர் அணி ஆறு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதன்முறை.

இந்திய வீரர்கள் அறுவர் ஓட்டமேதும் எடுக்காமல் ஆட்டமிழந்ததும் வேண்டாச் சாதனைதான்!

அதன்பின் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 62 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

முதல் நாளிலேயே 23 விக்கெட்டுகள் விழுந்ததால் ஆடுகளம் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

விக்கெட் விழும் வேகத்தைப் பார்த்தால் இரண்டாம் நாளிலேயே போட்டி முடிவிற்கு வந்தாலும் வியப்படைவதற்கு இல்லை!

குறிப்புச் சொற்கள்