ஆக்ரா: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் மூன்றாவது விக்கெட் காப்பாளராகச் சேர்க்கப்பட்டுள்ளார் 22 வயதான துருவ் ஜுரெல்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜுரெல், சென்ற மாதம் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய ‘ஏ’ அணியில் இடம்பெற்றிருந்தார்.
அங்கு தென்னாப்பிரிக்க ‘ஏ’ அணிக்கு எதிராக பெனோனியில் நடந்த ஆட்டத்தில் இவர் 63 ஓட்டங்களை எடுத்தார்.
அண்மையில் கேரள அணிக்கெதிரான ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் 63 ஓட்டங்களை இவர் எடுத்தார்.
ஜுரெல் சென்ற ஆண்டுதான் முதல்தரப் போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை அவர் 15 போட்டிகளில் 790 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார்.
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள ஜுரெலின் கதை பலருக்கும் முன்மாதிரியாக உள்ளது.
“ராணுவப் பள்ளியில் படித்தேன். விடுமுறை நாள்களில் ஆக்ராவில் உள்ள ஒரு கிரிக்கெட் பயிலகத்தில் சேர எண்ணினேன். விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்த நான் அதுபற்றி என் தந்தையிடம் சொல்லவில்லை. அதுபற்றித் தெரியவந்ததும் அவர் என்னைத் திட்டினார்.
“இருப்பினும், 800 ரூபாய் கடன் வாங்கி எனக்கு ஒரு கிரிக்கெட் மட்டை வாங்கித் தந்தார். கிரிக்கெட் விளையாடத் தேவையான மற்றப் பொருள்கள் வேண்டும் என்று அவரிடம் சொன்னதும். எவ்வளவு ரூபாய் என்று கேட்டார். ஆறு, ஏழு ஆயிரம் என்று சொன்னதும், கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிடும்படி என்னிடம் சொன்னார்.
“ஆனாலும், நான் பிடிவாதமாக இருந்து, குளியலறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன். பின்னர் என் தாயார் அவரது தங்கச் சங்கிலியை விற்று, மற்றவற்றையும் வாங்கித் தந்தார்,” என்று நினைவுகூர்ந்தார் ஜுரெல்.
இந்திய அணிக்குத் தான் தேர்வுசெய்யப்பட்ட தகவல் அறிந்ததும் தன் குடும்பத்தினர் அனைவரும் உணர்ச்சிப்பெருக்கில் மூழ்கியதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
இதனிடையே, ஜுரெல் இந்திய அணிக்குத் தேர்வாகியிருப்பது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான குமார் சங்ககாரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஜுரெல் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.